Tuesday 16 December 2014

தேவதைகளின் தேசம் ஸ்விஸ் -2

#லுசான்_சுவிட்சர்லாந்து 

பார்ட் -2

பனிக்காலத்தில் நான் பார்த்த அதே லுசான் இப்போது கோடையில் வேறு அழகுடன் மிளிர்ந்தது.. ஸ்விஸ் நாட்டை எழில் கொஞ்சும் நாடு என்பார்கள் அது ஏன் என இப்போது புரிந்தது.. சுற்றிலும் நீல நிறத்தில் உச்சியில் மட்டும் பனி மூடிய மலைகள் பச்சைபசேல் புல்வெளிகள் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் மரங்கள், செடிகள் ஊரே கழுவி விட்டது போல சுத்தம் மிதமான குளிர் ஆஹா..அற்புதம்..!

சாலைகள் வெகு சுத்தமாக இருக்கிறது.. போக்குவரத்து விதியை அற்புதமாக பின் பற்றுகிறார்கள்.. சாலையோரங்களிலும் பசேலென பூங்காக்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட தெருக்கள் ஒழுங்காக வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்ட வாகனங்கள் மின்சார பஸ் ரெயில் போக்குவரத்து அனைத்தும் துல்லியம் அழகு நேர்த்தி..ஆனால் நான் பார்த்தவரை அப்போது கார்கள் மிகக்குறைவு.. ஏனெனில்

கோடை காலத்தில் மக்கள் பெரும்பாலும் சைக்கிளை பயன் படுத்துகிறார்கள்.. அங்குள்ள எல்லா சாலையிலும் சைக்கிள்கள் செல்ல தனியாக சிவப்பு நிற பாதையே இருக்கிறது.. குளிர்காலத்தில் பனிச்சறுக்கு பயிற்சி... கோடையில் சைக்கிள் பயிற்சி..பொழுது போக்குடன் உடல்நலமும் காக்க வேண்டும் என்ற எண்ணம் அங்குள்ள ஒவ்வொருவரின் ரத்தத்திலும் ஊறியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ரியஸ் ஆறு இப்போது ரம்மியமாக இருந்தது.. சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தமான நீர்.. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மரப் பாலத்தில் நடந்து செல்வது தனிச்சுகம்.. ஆங்காங்கே இசைக்கலைஞர்களின் திறமை, ஜக்லிங் கலைஞர்களின் விளையாட்டு, அழகான பூங்கொத்து கடைகள், உங்களை அப்படியே 10 நிமிடத்தில் வரைந்து தந்துவிடும் கேரிகேச்சர் கலைஞர்கள் என நீங்கள் செல்லும் அப்பாதையின் பயணத்தை அழகாக்கி விடுகிறார்கள்.

அன்னப்பறவைகள் போன்ற வாத்துக்கள் நீந்துவது மீன்களுக்கு இரையிடும் பகுதி என ஒரு மாலை முழுவதும் ரம்மியமாக செலவிடலாம்.. சென்ற முறை உறைந்த ஆற்றின் மேல் டேபிள் போட்டு நாங்கள் உணவருந்திய இடத்தில் இப்போது ஒரு சிறிய கப்பல் நின்றிருந்தது.. ஆழம் மிக்க பகுதியாம்..! இரவு கப்பல் பயணமும் உண்டு தேனிலவு தம்பதியர் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றார் போல் ஒரு நாள் இருநாள் சுற்றுலாவும் உண்டு என்பதிலிருந்தே அந்த ஆறு எவ்வளவு பெரியது என யூகியுங்கள்.

இந்த நகரில் இருந்து லெளசான் நகருக்கு கிளம்பினோம்.. அது இன்னொரு புது அனுபவத்தை தந்தது.. லெளசானில் தான் அதை பார்த்து வியந்தேன்.. அது...

தொடரும்..



No comments:

Post a Comment