Saturday 13 December 2014

வாழ்க்கைப்பசி..

#வாழ்க்கைப்பசி

நடு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது அப்பாவின் உடல் இன்று அதிகாலை 6மணிக்கு துயிலிலேயே அமரரானார் திருச்சி சித்தப்பா சீக்கிரம் வந்தார் திருநெல்வேலி அத்தை வந்து கொண்டே இருக்கிறார் டெல்லியில் இருக்கும் அக்காவுக்கு 4 மணிக்கு ப்ளைட் சொந்த பந்தங்கள் குவிந்து கொண்டிருந்தனர்..

நேத்து கூட பேசினோமே என்ற அபத்தமான வார்த்தையை அப்பாவின் நண்பர்கள் வாய் சொல்லிக் கொண்டிருக்க அவர்களது கண்களில் மெல்லிய மரண பீதி தெரிந்தது.. ரோஜா சாமந்தி மாலைகளின் மணத்துடன் புகையும் ஊதுபத்தி மணமும் கலவையாய்வீசிக்கொண்டிருந்தது..அப்பா முகத்தில் மொய்த்த ஈக்களை அழுது ஓய்ந்த அம்மாவெறித்த பார்வையுடன் முந்தானை கொண்டு விரட்டிக் கொண்டிருந்தாள்..

வந்த அனைவரின் சோகமும் அந்தக் காற்றில் கலந்திருந்தது..பெரும் அழுகை, விசும்பல்,கேவல் என அழுகையின் ஒலிகள் பல பரிமாணங்களில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.. அப்பா என் ஆசான் என் வழி காட்டி என்குருஅவரது இழப்பு என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.. இனி இது அப்பா இல்லாத வீடு 

வாழ்க்கை கடினமாக தோன்றியது.. உள்ளே அமர்ந்தால் சோகம் என்னை தின்றுவிடும் என எண்ணி மெல்ல எழுந்தேன் வற்றிய கண்ணீருடன் காய்ந்த கன்னங்களை தடவிக் கொண்டேமெல்ல வாசலுக்கு வந்த போது பயங்கரமாக பசித்தது.. இப்போது வாழும் வாழ்வின் அர்த்தம் புரிந்தது.

No comments:

Post a Comment