Saturday 31 January 2015

கலைஞர் - அழகிரி.

கலைஞர் - அழகிரி சந்திப்பு..

கப்ஸா செய்திகள்.. இன்றைய கப்ஸா..

சென்னை: நேற்று கோபாலபுரத்தில் கலைஞரை சந்தித்தார் அழகிரி.. எடுத்தவுடன் வா உடன்பிறப்பே என்றழைத்து அவரது எரிச்சலில் எண்ணை ஊற்றினார் தலைவர்.. உலகின் எந்த மொழியிலும் அவருக்கு பிடிக்காத வார்த்தை இந்த உடன்பிறப்பு என்பது தெரிந்தும் அதை பயன்படுத்திய கலைஞரின் சாதுர்யத்தை மெச்ச வேண்டும்.

நீ கழகத்தை காக்காமல் கலகத்தை செய்யும் போக்கு எனக்கு பிடிக்கவில்லை என்று தலைவர் சொன்னதாகவும்.. தனக்கு ழகரம் வராது ஆகவே கழகம் என்பது என்னைப் பொறுத்த வரை கலகமே என்று அழகிரி அடித்த ஜோக் அருமையாக இருந்தது என அங்கு டீ குடிக்க போயிருந்த அல்லக்கை ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

என்னை ஏன் செயல்பட விடமாட்டேன் என்கிறீர்கள் என அழகிரி கேட்டதாகவும்.. செயல்படுதலா எப்படி நீ மத்திய அமைச்சராக இருந்தபோது செயல்பட்டது போலா? என கலைஞர் அவரை மடக்கியதாகவும் அந்த அறையில் இருந்த பல்லி மூலம் நமக்கு தகவல்கள் துள்ளி வந்து விழுந்திருக்கிறது.

உங்களைத் தவிர நான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அழகிரி பிடிவாதம் பிடித்ததாகவும்.. தலைவராக வேண்டாம் தம்பியாகவாவது ஏற்றுக் கொள் என்று தலைவர் பாசவலை விரித்ததாகவும் அழகிரி அதில் சிக்காமல் நான் பாசப்பறவை அல்ல மோசப்பறவை என்று எஸ்கேப் ஆனதாகவும் பல்லி சொல்லியது!

நான் அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியில் அழைக்கப்படுபவன் என்ற அழகிரிக்கு.. தளபதியாக இருப்பவரும் அஞ்சா நெஞ்சர் தான் என தலைவர் சாதுர்யமாக பதில் கூற.. அப்படி என்றால் என்னையும் தளபதி ஆக்குங்கள் என மடக்க..தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று நழுவும் மீன் ஆனாராம் தலைவர்!

J.K.ரித்தீஷ் அதிமுகவிலும், குஷ்பு காங்கிரசிலும்,நெப்போலியன் பாஜகவிலும் இப்படி தன் ஆதரவாளர்களை எல்லாம் ஒவ்வொரு கட்சியிலும் சேர வைத்தது தன் ராஜ தந்திரங்களில் ஒன்று எனவும்.. இனி இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சியிலும் என் ஆட்கள் இருப்பார்கள் என்றாராம் அழகிரி.

ஆதரவாளர்களை மட்டும் வேறு கட்சிக்கு அனுப்பிவிட்டு நீ மட்டும் ஏன் இங்கேயே இருக்கிறாய்? என்ற தலைவரின் மைண்ட் வாய்சை நேற்று பிறந்த குழந்தை கூட அபாரமாக கேட்ச் செய்தது.! மீண்டும் கழகத்திற்கு வர தலைவர் போட்ட நிபந்தனைகளும் அழகிரி சொன்ன நிபந்தனைகளும் ஒத்து வரவில்லையாம்.

டீலிங் சரியில்லாததால் அவசரமாக பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக வெளியேறினார் அழகிரி.. இதற்கு பின் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலைஞரிடம் அழகிரியை சந்தித்தது ஏன்? 

எனக் கேட்டதற்கு.. பேரன் துரை.தயாநிதி படத்துக்கு கதை. வசனம் எழுதும் விஷயமாக அழகிரி வந்து தன்னை சந்தித்ததாகவும்.. இது அரசியல் சந்திப்பு அல்ல என்றும் கேள்வி பால்களை எல்லாம் சிக்ஸருக்கு தூக்கினார் தலைவர்..!

அதே வேளையில் கழகம் திருந்த வேண்டும்.. நான் அப்போது தான் வருவேன்.. இப்போது தயாளு அம்மாள் கையில் தயிர் சாதம் சாப்பிடவே நான் கோபாலபுரம் வந்தேன் என விமான நிலையத்தில் அழகிரி பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

கப்ஸா செய்திகளுக்காக சென்னையிலிருந்து "ஊத்தவராயன்"

No comments:

Post a Comment