Wednesday 21 January 2015

பந்தி 3.. நெய் மிட்டாய்க்கடை

நான்கு தலைமுறை பாரம்பரிய மிக்க 114 வருட வயது கொண்ட அனுபவமிக்க கடை தான் மதுரை மேலச்சித்திரை வீதி "ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்கடை"1901ல் வைத்தியநாத அய்யர் என்பவர் துவங்கிய இக் கடையை அவரது மகன் விஸ்வநாதய்யர் வெகு சிறப்பாக தொடர.. இன்று..!

அவரது மகன் வெங்கட்ராமன் திறம்பட நடத்தி வருகிறார்.! இக்கடை இருட்டுக்கடை அல்வாவுக்கு 75 ஆண்டுகள் முந்திய கடை.! இன்றும் சுத்தமான நெய்யினால் மட்டுமே தயாராகும் பலகாரங்கள் இக் கடையின் தனிச்சிறப்பு.! அது மட்டுமின்றி இக்கடையின் காராசேவும் மிகுந்த புகழ் பெற்றது.!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வாசலுக்கு எதிரே இருக்கும் இக்கடையின் பலகாரங்களுக்கு அடிமையானவர்கள் பலர்.! நெய் அல்வா, காராசேவு, மிக்சர், மொறு மொறு வெங்காய பக்கோடா, பட்டணம் பக்கோடா, முரட்டு மிக்சர், ஓமப்பொடி என இக்கடையின் சுவைமிகு பலகாரங்களின் பட்டியல் நீண்டாலும்...

இக்கடையின் சிறப்பு"உருளைக் கிழங்கு காரக்கறி" காலை 7 மணிக்கு கிடைக்கும் இந்தக் கறியானது 5 ரூபாய் 10 ரூபாய்க்கு சிறிய பொட்டலங்களாக கிடைக்கும்.! பழைய சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, தோசை, என எல்லா வகையான உணவுக்கும் ஏற்ற சைட் டிஷ்.!

12 மணிநேரம் ஊசிப்போகாமல் தாங்கும் இந்த சைட் டிஷ் தமிழகத்தில் எந்த கடைகளிலும் கிடைக்காத சிறப்பம்சமாகும்.. ஏழை எளியவர்களின் உணவுக்கு தொட்டுக் கொள்ள இன்றளவும் இதை ஒரு சேவையாக செய்து வருகிறார்கள் நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய் நிறுவனத்தார்.!

அது மட்டுமின்றி இங்கு தயாராகும் அல்வா சுத்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது.! சுடச்சுட இந்த அருமையான சுவையுடைய அல்வாவை விழுங்கிய உடன் உங்களுக்கு இலவசமாகவே சிறிது காராசேவு வழங்கப்படும்.. உண்மையில் இது ஒரு தூண்டில்.! மொறு மொறு கர கர அந்த காரா சேவை அடுத்து நீங்கள் கேட்டு வாங்கவே அந்த இலவசம்.! அவ்வளவு சுவை.!

அதுமட்டுமின்றி வாழையிலை, தாமரையிலை, அரசயிலையில் உணவு பரிமாறி பார்த்து இருப்பீர்கள்.! ஆனால் இங்கு பயன்படுத்தப்படுவது புரசை இலை.. தவில், உறுமி மேளங்கள் அடிக்க பயன்படும் குச்சி இந்த மரத்தின் குச்சியே! இன்று இந்த மரங்களின் இலைகள் போதியளவு மதுரையில் கிடைக்காததால் அவ்விலைகளை ஆந்திராவிலிருந்து தருவித்து அதில் தான் நமக்கு தருகிறார்கள்.!

சுத்தம், சுகாதாரம், தரம், நியாயமான விலை என்ற கோட்பாடுடன் வணிகம் செய்யும் இவர்கள் சுவையின் பேரரசர்கள்.! நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய்மிட்டாய்கடை என்ற பெயரே மக்களை சுவையின் பிடியில் ஆழ்த்திவிடும்.! பீட்ஸா பர்கர் கலாசாரத்தை விட நம்மூர் பலகாரங்களை அக்கறையோடு தயாரித்து தரும் இவர்களை வாழ வைப்போமே.. வாங்க மதுரைக்கு .. வந்து சுவைக்க மறக்காதிங்க நம் மேல கோபுர வாசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய்மிட்டாய் கடையை"

No comments:

Post a Comment