Saturday 10 January 2015

தமிழ் அன்றும்.. இன்றும்..

#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 1

என்னிடம் ஒரு கேள்வி பதில் பகுதியில் கேட்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி.! இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் எப்படி இருக்கும்.? அத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் உத்தேசமில்லாததால்  இதற்கு பதிலளிக்க இன்றைக்கு 100 ஆண்டுகள் முன்னால் இருந்த தமிழையும் இன்றையத் தமிழையும் ஒப்பிடத்தான் முடிந்தது. மொழியின் மாற்றங்கள் Secular Changes என்கிற வகையில் தான் நிகழ்கின்றன.

மெல்ல மெல்லப் பேச்சு செளகரியத்துக்காக மாறுகிறது. நாகரிக தாக்கத்தின் மாறுதலுக்காகப் புதிய வார்த்தைகளை அனுமதிக்கிறது. இலக்கணத்திலும் இலக்கியத்திலும் உள்ள சிக்கல்களை பேச்சு நடை நைசாக கழற்றி விடுகிறது. உதாரணம்: 'காண்கின்ற'வருகின்ற' என்றெல்லாம் எழுதுகிறோம். யாரும் பேசுவது இல்லை. 'பாக்கற'வர' தான். தமிழ் ஜெர்மன் போல ஒரு Agglutinative மொழி.

அதாவது ஒட்ட வைக்கும் மொழி. உடம்படுமெய் விதிகளை பயன்படுத்தி ஒட்ட வைத்துக் கொண்டே போகலாம். பார்க்கின்றவர்களுக்கென்றே யாகிவிட்ட என்று நீட்டி எழுதலாம் ஆனால் பேச்சில் பாக்குறவங்களுக்குன்னே ஆய்ட்ட என்று தான் திறமையாக சுருக்கி விடுகிறோம். இதற்கு காரணம் படிப்பதும் பேசுவதும் வெவ்வேறு செயல்கள். அதைப் பற்றி நாளை பார்க்கலாம்.. #சுஜாதா (வரும்...)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 2

படிப்பதும் பேசுவதும் வெவ்வேறு செயல்கள்.. படிப்பதற்கு நிறைய சமயம் இருக்கிறது நல்ல வெளிச்சத்தில் பின்னணியில் டேப் ஒலிக்க நிதானமாக பக்கம் பக்கமாக வரி வரியாகப் படிக்க முடியும். பேசுவது அப்படி அல்ல! கிடைத்த நேரத்தில் சொல்ல வேண்டியதை கேட்பவருக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயமும் அவசரமும் உள்ளது. சில சமூக அடையாளங்களை காட்டவும் அல்லது ஒளித்து வைக்கும் நிர்பந்தங்களுமுண்டு. எனவே தான் தமிழில் பேச்சும் எழுத்தும் வேறுபடுகிறது.

பட்டிமன்றத்திலும் இலக்கிய கூட்டங்களிலும் ஒலிக்கும் தமிழ் மார்க்கெட்டில் ஒலிப்பதில்லை. தமிழைக் கற்றுக் கொள்ளும் மேல்நாட்டவரின் முதல் வியப்பு இது தான்.அதே போல் பத்திரிக்கை புத்தக எழுத்துத் தமிழில் ஏற்படும் மாற்றங்கள் மெல்ல நிகழ்பவை.தற்போது வட மொழி வார்த்தைகளை மெல்ல மெல்ல கழற்றி விட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல காரணங்கள் உண்டு. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வழங்கிய புத்தகத் தமிழுக்கு ஆதாரம் A.K.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகள் எனும் நூலில்
உள்ளது.! அது பற்றி நாளை பார்க்கலாம்.. #சுஜாதா (வரும்...)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 3

A.K.செட்டியாரின் 'தமிழ்நாடு'பயணக்கட்டுரைகள் புத்தகம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வழங்கிய புத்த்கத்தமிழுக்கு ஓர் நல்ல உதாரணம். இந்தப் புத்தகம் ஒரு ஆச்சர்யகரமான தொகுப்பு. அவர் எழுதிய பல பயண நூல்களை சென்ற தலை முறையினர் படித்திருக்கிறார்கள். அவரது பல பழைய பத்திரிக்கை நூல்களிலிருந்து  பயணக் கட்டுரைகளைத் தொகுத்து 1968இல் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது.அது மறுபதிப்பாகியுள்ளதா என்பது தெரியவில்லை.! 

அவர் சிறந்த பயணக்கட்டுரைகள் எழுதியவர் மட்டுமல்ல'குமரிமலர்' என்ற பத்திரிக்கையை சிறப்பாக நடத்தியவர். நல்ல அழகான காகிதத்தில் ரீடர்ஸ் டைஜஸ்ட் போல அச்சிட்டு ஒரே மாதிரி அட்டையுடன் வெளிவரும். நான் பார்த்து இருக்கிறேன், அதை யாராவது சேர்த்து வைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அவர் 300 பிரதிகள் தான் அச்சிட்டாராம். அதற்கு மேல் சந்தாவுக்கு பயங்கர டிமாண்ட் இருந்தும் மறுத்து விட்டாராம்.! விளம்பரங்களும் வாங்கவில்லையாம்.!

புதுசாக சந்தா சேர யார் கேட்டாலும் பழைய சந்தாதாரர் புதுப்பிக்காவிட்டால் அல்லது சந்தாதாரர் யாராவது காலமாகிவிட்டால் தருகிறேன் என்பாராம். தமிழில் சந்தா கட்ட க்யூவில் இருந்த ஒரே பத்திரிக்கை'குமரிமலர்'.. #சுஜாதா (வரும்...)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 4 

தமிழில் வசனநடை பலவகைப்பட்டது. உரைநடை, கவிதை என்ற இரு பெரும் பிரிவுகளில் தமிழ் இலக்கியத்தில் ஆரம்ப காலத்தில் செய்யுள் நடைதான்  மேலோங்கி இருந்தது. பாட்டிடை வைத்த ஒரு சில உரைநடைக் குறிப்புகள் தாம் தமிழில் Prose என்பதன் ஆரம்பம். அதிக வசனநடையில் எழுதப்படாததற்கு முக்கியக் காரணம் காகிதம் இல்லாதது. பட்டோலைப்படுத்தி எழுதுவது மிகக் கடினம்.அதனால் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டது.

செய்யுள் நடையில் ஒரு அழுத்தமும் வார்த்தை சிக்கனமும் கிடைக்கும். மேலும் எதுகை மோனை இருந்தால் மனப்பாடம் செய்வதும் வாய்மொழிப் பரவலும் எளிதாக இருந்தது. ஏறக்குறைய உலகின் எல்லா மொழிகளிலும் ஆரம்பத்தில் இலக்கியங்கள் செய்யுள் வடிவம் பெற்றிருந்தன.அச்சு இயந்திரம் வந்ததும் உரைநடை பெருகியது என்று சொல்லலாம். தமிழில் உரைநடையின் தேவை செய்யுள்களுக்கு விளக்கமாக விரிவுரை எழுத அதிகம் தேவைப்பட்டது அதுபற்றி நாளை.. #சுஜாதா (வரும்...)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 5 

தமிழில் உரைநடையின் தேவை வைணவ இலக்கியமான நாலாயிர திவ்யப்பிரபந்தம் போன்ற செய்யுள் இலக்கியத்திற்கு தேவைப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் தூய தமிழில் இருந்த செய்யுள்களுக்கு உரைநடையில் விளக்கவுரை எழுதுகையில் மிகுதியான சமஸ்க்ருத வார்த்தைகளில் மணிப்ரவாளமாக எழுதப்பட்டது. நம்பிள்ளை என்பவர் எழுதிய திருவாய் மொழிக்கான ஈடு வியாக்கியானம் முதல் வாசிப்பில் புரியாது. வியாக்கியனத்திற்கு வியாக்கியானம் தேவைப்படும்.

திரு.புருஷோத்தம் நாயுடு நம்பிள்ளையின் ஈட்டை மணிப்ராவளத்திலிருந்து நல்ல தமிழுக்கு மொழி பெயர்த்துத் தந்துள்ளார். மணிப்ரவாள நடை படிப்பதற்கு கடினமாக தெரிந்தாலும் அதன் போக்கு தெரிந்துவிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும் சட்டென்று ஆச்சரியகரமான பொருத்தமான தமிழ் சொற்கள் வந்து விழும். இன்று அப்படி எழுத யாருமில்லை. ஸுதர்சனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் எழுத்து தமிழ் மணிப்ரவாளதுக்கு நம்மை தயார் படுத்தும் அது பற்றி நாளை.. #சுஜாதா (வரும்...)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 6

மணிப்ரவாள நடை என்றால் என்ன.? படிப்பதற்கு கடினமாக தெரிந்தாலும் சுவாரஸ்யமானது சட்டென ஆச்சர்யமாக பொருத்தமாக தமிழ்ச் சொற்கள் வந்து விழும். ஸுதர்சனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் எழுத்தை படியுங்களேன்...

இளம் பிள்ளையான இவரை சாஸ்த்ர விவாதமில்லாமல் லெளகீக விஷயங்களில் தோற்கடித்து விடலாம் என்று எண்ணிய ஆக்கியாழ்வான் "லெளகீகங்களிலே நீர் இல்லை என்பதை நான் உண்டு என்பேன். 

நீர் உண்டு என்பதை நான் இல்லை என்பேன். வென்றவன் தோற்றவன் தலையிலே அடிக்க வேண்டியது தான் எனக் கூறினான். அதற்கு இசைந்த யமுனைத் துறைவர் (1) உன் தாய் மலடியல்ல (2) அரசன் தார்மீகன் (3) ராஜபத்நி பதிவ்ரதை என்று மூன்று வாக்கியங்களைச் சொல்லி அவனை மறுக்கச் சொன்னார். 

அவன் அதை மறுக்க இயலாமல் மெளனியாய் இருந்தான். பின்பு சாஸ்த்ர விசாரமும் நடந்தது. அதிலும் தோல்வியுற்றான் ஆக்கியாழ்வான். இந்த அடைப்பு குறிக்குள் இருக்கும் எண்படி நடந்த சாஸ்த்ர விவாதம் நாளை.. #சுஜாதா (வரும்...)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் -7 

ஆக்கியாழ்வான் மறுக்க வேண்டிய மூன்று வாக்கியங்கள், 1) உன் தாய் மலடியல்ல (2) அரசன் தார்மீகன் (3) ராஜபத்நி பதிவ்ரதை.. இந்த மூன்றையும் மறுத்தால் தாய் மலடியாகவும் அரசன் தார்மீகமாக பொறுப்பு ஏற்காதவன் என்றும் மகாராணி கற்பு நெறி கெட்டவள் என்றும் அர்த்தமாகிறது ஆனால் நடந்த சாஸ்த்திர ரீதியான விவாதத்தையும் விளக்கத்தையும் மணிப்ராவள நடையில் படியுங்களேன்...

(1) 'ஒருமரமும் தோப்பல்ல ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல' என்ற உலக வழக்கின் படி, நிலையற்றதான இவ்வுலகில் ஒரு பிள்ளையை பெற்ற தாய்"இப்பிள்ளை நமக்கு தக்க வேணுமே.நம்மை ரக்ஷிக்க வேணுமே" என்று கலங்கிக் கொண்டேயிருப்பாள் ஆகையால் அவள் பிள்ளை பெற்றும் மலடியேயாவாள். இம்முறையில் ஒரு பிள்ளை பெற்ற ஆக்கியாழ்வானுடைய தாயார் மலடியேயாகையால் முதல் வாக்கியம் மறுக்கப்பட்ட்து.

(2) குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேருமாகையாலே பரம தார்மிகனான இவ்வரசனும் குடிமக்கள் செய்யும் பாபத்திலே பங்கு பெறுகிறானாகையாலே இரண்டாவது வாக்கியமும் மறுக்கப்பட்டது.

(3) "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருதீயோ அக்நிஷ்டே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜா:" (ஸோமன் முதல் நாள் உன்னை மணம் புணருகிறான் கந்தர்வன் அடுத்தநாள் உன்னை மணம் புணருகிறான். மூன்றாவது நாளிலே அக்னியானவன் உனக்கு பதியாகிறான்.நாலாவது நாளிலே கைப்பிடித்த மனிதன் பதியாகிறான்) என்கிற வேத வாக்கியத்தின் படி வைதீக முறையில் மணந்து கொண்ட எல்லா ஸ்திரீகளுக்குமே மணமான முதல் மூன்று நாட்களில் தேவதைகளோடு தொடர்பு உண்டாகையாலே பதிவ்ரத்யத்தில் குறையுண்டு. அக்குறை பரம வைதிகமான முறையில் அரசனைக் கைப் பிடித்த ராஜபத்நிக்கும் உண்டாகையாலே மூன்றாவது வாக்கியமும் மறுக்கப்பட்டது". 

இது தான் மணிப்ரவாள நடை இந்த நடை பழகிவிட்டால் மெல்ல மெல்ல நம்பிள்ளையின் ஈடு புரியத்துவங்கும்... நாளை செம்மொழி.. #சுஜாதா (வரும்...)










No comments:

Post a Comment