Wednesday 28 January 2015

தமிழகம் கி.பி2114.

கிபி : 2114 இல் தமிழகம்..!


இந்தியா யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியாவாக மாறி இருந்த காலம் அது.. சென்னை ஸ்டேட் தான் இந்தியாவின் சிறந்த ஸ்டேட்டாக இருந்தது..! இந்தியாவில் தலையாய தொழில் நகரமாக சென்னை இருந்தது..மொத்த உலகமும் சோலாருக்கு மாறி 40 ஆண்டுகள் ஆன படியால் நகரமே மாசில்லாது தூசு இல்லாது மிளிர்ந்தது.. 

சாலையில் சாட்டிலைட் உதவியுடன் ஓட்டுனர் இல்லா அதி நவீன கார்கள் துல்லியமான ஒழுங்கு படுத்தப்பட்ட வேகத்தில் சிக்கலின்றி விரைந்து கொண்டிருந்தது..! மனிதர்களுக்கு ஓட்டுனர் உரிமையே இல்லை என்பதால் சிக்னல்கள் மதிக்கப்பட்டன... ஹைடெக் லைட் வெயிட் சிமிண்ட்டுகளால் கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடங்கள் அணிவகுத்து நின்றன.. 

மரம் வளர்ப்பு கட்டாயப்படுத்தப்பட்டாதால் எங்கும் மரங்கள்..சாலைகளில் சோலைகளும் நீருற்றுகளும் அழகாய் அமைந்து இருந்தன வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின..! நாட்டின் கட்டாயத் தொழிலாக விவசாயம் இருந்தது.. கல்வி மருத்துவம் இரண்டும் இலவசமாக்க பட்டிருந்தது.. நாட்டு மக்கள் அனைவரும் ஒழுங்காக வரி செலுத்தினார்கள்..!

மக்கள் சுத்த பருத்தி ஆடைகள் அணிந்து இருந்தனர்.. மேக்னட் டிரெயின் ஏறி டெல்லிக்கு வேலைக்கு செல்பவர்கள் க்யூவில் நின்றார்கள்..! ஆம் மணிக்கு 1000 மைல் வேகம் செல்லும் ரயில் அது.. சென்னை to டெல்லி  2 மணிநேரப் பயணம் தான்... ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் குணமும் ,ஒழுக்கமும், பொறுமையும், அறிவும் மக்களிடம் மிகுந்து இருந்தன..! 

நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.. அவர்கள் சிறு தவறு என்றாலும் பதவியை தூக்கி எறியும் குணம் கொண்டவர்கள்..! நாட்டின் பற்பல வளர்ச்சிக்கு திட்டங்கள் தீட்டினார்கள் லஞ்சம் அறவே ஒழிந்து இருந்தது.. நாட்டில் கொலை கொள்ளை பயமே இல்லை... மக்களிடம் பணப் புழக்கம் அதிகரித்து இருந்தது..!

உலகில் மக்கள் வாழத்தகுதியான நிம்மதியான செல்வம் நிறைந்த இடப்பட்டியலில் முதலிடம் சென்னைக்கு கிடைத்தது.. நதிகள் இணைக்கப்பட்டு நீர்வளம் மிகுந்து இருந்தது.. மக்கள் ஆரோக்கியமான உணவுகள் உண்டனர்.. மதுப்பழக்கம் அறவே யாருக்குமில்லை.. சிகரட்டை ஒழித்துவிட்டிருந்தார்கள்.. மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்..!

தங்கு தடையின்றி மின்சாரம் இருந்தாலும் மக்கள் அதை சிக்கனமாக பயன் படுத்தினார்கள் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாய ராணுவ பயிற்சி எடுத்து இருந்தனர்.. நாட்டு மக்கள் அனைவரும் குறைந்தது 5 வருடம் விவசாயம் செய்ய வேண்டும் என்ற சட்டமே இருந்தது..! மருத்துவமனைகளில் எவ்வளவு நவீன சிகிச்சைக்கும் பைசா செலவில்லை..!

மக்கள் அனைவரும் உடல் தானம் கண் தானம் செய்திருந்தனர்.. தேவையோ இல்லையோ ரத்த தானம் மூலம் ரத்தம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்தனர் 3மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் அளிக்க மக்கள் தயாராக வந்து மருத்துவமனை நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர்..அப்போது "டேய் அறிவிருக்கா எந்திரிடா"என்ற குரல் ஒலித்தது..!

அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரவியை எழுப்பியது நண்பன் ஹரியின் குரல்."என்னடா ஆபிஸ்ல தூக்கமா விளங்கிடும்", என்றான்.. அலங்க மலங்க விழித்த ரவிக்கு அப்போது தான் தெரிந்தது தான் கண்டது அத்தனையும் கனவு என்று..!


வெங்கடேஷ் ஆறுமுகம்
9944960365
venkatapy@gmail.com

No comments:

Post a Comment