Sunday 25 January 2015

ஶ்ரீரங்கத்தில் ஒபாமா.!

ஒபாமாவின் தாஜ்மஹால் பயணம் ரத்தாகிவிட்ட சூழலில் அதற்கு பதிலாக மோடிக்கு ஒரு சூப்பர் ஐடியா தோன்றுகிறது.! ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒபாமாவை தமக்கு ஆதரவாக பேச வைக்கும் மாஸ்டர் ப்ளானை சொல்ல ஒபாமாவும் ஶ்ரீரங்கம் பற்றி கேள்விப்பட்டு ஓகே சொல்ல அதகளப்படுகிறது தமிழ்நாடு.. (முக்கியமாக திருச்சி)


வழக்கம் போல அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வசம் திருச்சி ஒப்படைக்கப்பட கெடுபிடிகள் ஆரம்பம்..! சற்று அகண்ட காவிரியை கண்ட அமெரிக்கர்கள் நீர் வழியாக ஆபத்து வரலாம் ஆகவே 2நீர் மூழ்கி கப்பல்களை காவிரியில் கொண்டு வந்து நிறுத்தலாமா என ஆலோசித்தார்கள். குறுக்கிட்டனர் தமிழக அதிகாரிகள்..!

சார் நீங்க நினைக்கிறா மாதிரியெல்லாம் இல்லை கர்நாடகாகாரன் தண்ணி விட்டுருந்தா கூட கொஞ்சம் தண்ணி இருந்திருக்கும் இப்ப இருக்குற தண்ணியில பரிசல் கூட மூழ்காது என்றனர்.! பரிதாபத்துடன் கண் கலங்கிய அமெரிக்கர்கள் சரி சரி.. இங்கு நாங்கள் சொல்லும்படி பாதுகாப்பு தாருங்கள் என்று சொன்னார்கள்.

ஆற்றின் கரைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டன ஒபாமா வரும் வரை மக்கள் யாரும் குளிக்கக் கூடாது (ஆற்றில்) வாகனங்களை கழுவக்கூடாது,துணி துவைக்கக் கூடாது,ஆற்றில் மீன் பிடிக்க கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆறுதலான கெடுபிடி அவர் வரும் வரை ஆற்றில் மண் அள்ளக்கூடாது என்பதே.!

மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் உச்சியில் இராணுவ கூடாரம் அமைக்கப்பட்டு அதி நவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டது.. அதன் வழியாக பெரம்பலூரில் உள்ள ராஜா மெடிக்கல்ஸ் கடையின் போர்டை இங்கிருந்தே துல்லியமாக படிக்க முடிந்தது! அந்தளவு பவர்ப்ஃல் டெலஸ்கோப்.!

அந்த டெலஸ்கோப் வழியாக பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு பிள்ளையாரே அமைதியாக உட்கார்ந்திருந்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டு இராணுவ செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டன. ப்ளாட்பாரவாசிகள் விரட்டப்பட்டனர்.

பிளாட்பாரக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. கொத்து புரோட்டா போடுவதும் தடை செய்யப்பட்டது.. ஓபாமா வரும் நாளும் அதற்கு முந்திய நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.! இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வெளிவரத் தடை விதிக்கப்பட்டது.. கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது போல.!

காஷ்மீர் மக்களின் வாழ்க்கை என்னவென்று திருச்சிவாசிகள் உணர்ந்த நாள் அது.! ரயில் நிலையம் விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு.. தெருவெங்கும் ராணுவம், மத்திய ரிசர்வ்போலீஸ், அமெரிக்க அதிகாரிகள் என பலத்த பாதுகாப்பு..!
ஶ்ரீரங்கத்தில் தான் இன்னும் அதிகளவு பாதுகாப்பு.!

ஒபாமாவின் பயணத்திட்டத்தில் அவர் பேசும் இடம் என்பதால் பாதுகாப்பு வளையத்தின் முக்கிய அடுக்கில் இருந்தது ஶ்ரீரங்கம். அரங்கனின் கோவில் முழுவதும் அமெரிக்கர்கள் பாதுகாப்பு..! ஒவ்வொரு அர்ச்சகருக்கும் பக்கத்திலும் ஒரு ராணுவ வீரர் நின்று கொண்டு இருந்தார்.. கோவில் மக்களின் கடவுள் நம்பிக்கை மிகுந்த இடம் என்பதாலும் பாஜக கட்சி என்பதாலும் அதை மட்டும் பூட்டவில்லை.! 

அர்ச்சகர் கையில் வரும் அர்ச்சனை தட்டெல்லாம் மெட்டல் டிடெக்டர்களால் பரிசோதிக்கப்பட்டது..தேங்காய்&பழம் எதற்கு, துளசி &மாலை எதற்கு, தீர்த்தம் எதற்கு, ஜடாரி எதற்கு ஆயிரம் கேள்விகள்.! நல்லவேளை அரங்கன் உறக்கத்தில் இருந்தான் இல்லை எழுந்து வந்து அறைந்திருப்பான்.!

அமெரிக்கர்களுக்கு மட்டும் பிரபந்தம் தெரிந்திருந்தால் அர்ச்சகர்களாகவே மாறி இருப்பார்கள்.. அது போல ஆச்சாரகேடு எதுவும் நடக்கவில்லை.! எல்லா ஶ்ரீரங்க வாசிகளுக்கும் டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவர் போல போட்டோவுடன் ஐ.டி கார்டு வழங்கப்பட்டது.அதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் தான் தெருவுக்குள் போய் வரலாம்.! லெச்சு பாட்டி தான் பிடிவாதம் பிடித்தாள்.!

என் ஆம்படையான் போனதுக்கப்புறம் தாலியையே கழட்டி வச்சவ இப்போ இத மாட்டிக்கிறதான்னு..அவளுக்கு மட்டும் சுருக்கு பையில் வைத்துக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி.! தெருவில் எல்லோரும் பேசியது அந்த ஐ.டி கார்டு பற்றித்தான்.. 
ஏண்டா வரதா யூ.எஸ்காரா குடுத்த ஐடி கார்டு பாத்தியோ எவ்ளோ வழவழன்னு.. அழகா நம்மவாளை போட்டோ எடுத்து கொடுத்துருக்கா இந்த ஆதார் கார்டும் வோட்டர் கார்டும் எடுக்குறவா கிட்ட போய் இவாளாண்ட கத்துக்க சொல்லணும்.!

தேரடி வீதிகளும் அடையவளஞ்சான் உள்ளிட்ட வீதிகளும் பாதுகாப்பு வீரர்களால் நிறைந்தது.! எல்லார் வீட்டு மாடியிலும் பல துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் புரிந்தனர்.! மாமிகளும், பாட்டிகளும், காக்காய் விரட்ட ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் மாடியில் வடாமோ, மிளகாயோ காயப்போட்டு விட்டு.. ராணுவ வீரரை பார்த்து..

ஏண்டா அம்பி..! சித்த இதை பார்த்துகோடா என்று சொல்லிவிட்டு பாராயணம் படிக்கவோ டிவி சீரியல் பார்க்கவோ கிளம்பினார்கள்.! ஊரெங்கும் போஸ்டர்கள் அலங்கார வளைவுகள், தோரணங்கள்.இதோ இன்று ஒபாமா வரும் நாள்..

பாதுகாப்பு காரணமாக தமிழிசை, பொன்னார், இல.கணேசன் மட்டும் திருச்சி விமான நிலையத்தினுள் காத்திருக்க கட்சியினர் விமான நிலையதிற்கு வெளியே கூடி இருந்தனர்.! தன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வந்திறங்குகிறார் ஓபாமா& மிச்சேல் பின்னால் அமித்ஷாவுடன் மோடியும் வர மிகுந்த மரியாதையுடன் வரவேற்பு.

அது முடிந்ததும் விமான நிலயத்தில் விமானம் நிற்கும் இடத்திற்கே ஒபாமாவின் பீட்ஸ் கார் வந்து கீறிச்சிட்டு நிற்க அதில் ஏறி ஶ்ரீரங்கம் புறப்படுகிறார்கள்.! இனி

வரும்...

No comments:

Post a Comment