Wednesday 21 January 2015

தீனா - ஜனவரி (4)

"தீனா கொரலு"

போங்கு,பேராசை,காண்டு,கேவலமா பேஸ்றது... இந்த 4 கொணத்தையும் மன்சன் அவங்கிட்ட இர்ந்து ஒத்தி வச்சிட்டான்னா அவந்தான் நேர்மியா, நாயமான வழி நடக்குறவன்.! "பொறாம,பேராசை, கோவம்,இழிசொல்லு.. இது நாலயும் ஓரங்கட்டி நீ நேர்மியா நில்லு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அறன்வலியுறுத்தல் : குறள் எண் : 35 ]


"தீனா கொரலு"

ஒர்த்தனை யாரு இன்னான்னே தெர்யாம... அவுனோட பேக் கிரவுண்ட் இன்னான்னு கரீட்டா எதுமே விசாரிக்காம... அவுன உன்னாண்ட வேலக்கி வச்சிக்கினா அத்து உனுக்கு மட்டுமல்ல உன் தலமுறய்க்கே பேஜாரா ஆய்டும்.! " தராதரம் இல்யாதவன சேத்துகினா.. உன் தலமுறயே நாஸ்தி" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

[ பொருட்பால் : அதிகாரம் : தெரிந்துதெளிதல் : குறள் எண் : 508 ]


"தீனா கொரலு"

வாழ்க்கயில தம்மேல பழி உயுந்துடாம வாழ்றவன் தான் மெய்யாலுமே உசுரு வாழ்ற மன்சன்.. அத்தே ஒர்த்தன் புகழ் இல்யாம வாழ்ந்தா அவன் உசுரோட இர்ந்தும் உசுர் வாழாதவன்.! "பழி இல்யாம வாழறது நல்ல கொணம்.. புகழ் இல்லாம வாழ்ந்தா நீ பொணம்" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புகழ் : குறள் எண் : 240 ]


"தீனா கொரலு"

வெவசாயம் பண்ணாம வேற எந்த வேல பாத்துகினு இர்ந்தாலும் அல்லாத்துக்குமே வேளாவேளைக்கு துண்றதுக்காண்டி கஸ்டப்பட்டு ஒழைக்கறவங்க ஆரு தெரிமா.? வெவசாயத்தியே தொழிலா பண்றவங்க தான்.! அவுங்க தான் இந்த ஒல்கத்துக்கே அச்சாணி மேறி.! "அல்லா தொழிலும் ஒப்புக்கு சப்பாணி.. உழவன் தான் ஒல்கத்துக்கே அச்சாணி" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : உழவு : குறள் எண் : 1032 ]


"தீனா கொரலு"

மன்சனுக்கு பலான மூடு வர் சொல்லோ அத்த அயகா அனுபவிக்கணும்.. ஏன்னா பலான மூடுங்கறதே ஒரு பூவை வுடொ மெலிசானது.. அத்த புர்ஞ்சிகினு கொஞ்சம் பேரு தான் அப்டி அனுபவிக்கிறாங்கோ.! "பூப்போல அனுபவிச்சா காமம்.. அத்த தெரியாம இர்ந்தா நீ பாவம்" குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்

செவ்வி தலைப்படு வார்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சி விதும்பல் : குறள் எண் : 1289 ]

No comments:

Post a Comment