Friday 9 January 2015

பாசுரம் - 46

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (46) புத்தகத்திலிருந்து...

46. எதுவும் வேண்டாம்...

"இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே" என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் 'பச்சைமாமலை போல் மேனி' என்று துவங்கும் பாடல் பிரசித்தமானது. இந்திர பதவி கிடைத்தாலும் வேண்டாம். திருமாலைத் தொழுதால் போதும் என்ற கருத்து பிற ஆழ்வார்களின் பாடல்களிலும் அவ்வப்போது வெளிப்படுகின்றது. உதாரணமாக பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் பாடியிருக்கும் இந்த வெண்பா....

மண் உலகம் ஆளேனே; வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன் அகத்து மேவேனே -- நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை, எங்கள்
பெருமானை, கை தொழுத பின்.

( மேவேனே - நெருங்க மாட்டேன், நண்ணி - கிட்டுதல்/கிடைத்தல் )

இந்த பூமி முழுவதும் ஆளக்கொடுத்தாலும் ஆளமாட்டேன். தேவர்களுக்கு தேவனாய் சொர்க்கத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் போக மாட்டேன். எங்கள் பெருமாளை வணங்கிய பின் இவையெல்லாம் எனக்குத் தேவையில்லை.

பூதத்தாழ்வார் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? முதலாழ்வார்கள் பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் அடைமொழியால் குறிக்கப்பட்டுள்ளனர். பூதம் என்றால் உயிர் என்று ஓர் அர்த்தமுண்டு. பூத உடல் எந்த வார்த்தையை கேள்விப் பட்டிருப்பீர்கள்.தன்னுயிர் திருமாலுக்கே என்றிவர் சொன்னதால் தான் இவருக்கு....

இப்பெயர் ஏற்பட்டது எனவும் ஒரு கதை உண்டு. அக்கூற்றை நிரூபிக்கும் வகையில் உள்ளது இப்பாசுரம். சிவந்த கண்கள் கொண்ட உயரமான திருமாலை நெருங்கி தொழுதபின் வேறு எது கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்.இன்று நம்மில் பலர் இறைவனைத் தொழுவதே மண்ணுலகம் ஆள்வதற்கும் பெரும் பதவிக்காகவும் தான்!

பூதத்தாழ்வார் போன்ற அப்பாவித் துறவிகள் தாம் இதெல்லாம் வேண்டாம் தரிசனம் மட்டும் போதும் என்பார்கள்.  - எழுத்தாளர் சுஜாதா...

No comments:

Post a Comment