Thursday 1 January 2015

திருவெம்பாவை - அண்ணாமலையான்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

அண்ணாமலையானின் பாதங்களின் ஒளி அவனைத் தொழும்

வானவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் ஒளிர்வதை விட

அதிகமாய் பிரகாசிக்கிறது. எப்படி சூரியன் உதித்ததும் வானில்

நட்சத்திரங்கள் தெரிவதில்லையோ அதைப்போல ஒப்பில்லா

ஒளியாக அது விளங்குகிறது. ஆணாய் பெண்ணாய் அர்த்தநாரியாய்

மின்னும் ஒளிபோல் விண்ணுக்கும் மண்ணுக்கும் எழுந்து நின்று

இவை அனைத்திற்கும் வேறாகவும் நிற்கும் அவனை, கண்ணிலேயே 

அமுதம் போல குடித்திடும் அழகுடைய சிவனை, அவன் பாதங்களை

பாடி இந்த மலர்க்குளத்தில் பாய்ந்து நீராடுவோம் எம்பாவாய்.

பாடல்: 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;

பிறங்கொளி - மின்னும் ஒளி.


No comments:

Post a Comment