Friday 16 January 2015

கலைஞர் - ஜெயலலிதா சந்திப்பு.

கலைஞர் - ஜெயலலிதா சந்திப்பு 

(ஒரு உரையாடலில்..)

கப்ஸா செய்திகள்... இன்றைய கப்ஸா..

கலைஞர் அன்று முக்கிய விஷயமாக ஜெ.அன்பழகனிடம் பேசுவதற்கு போனில் அழைக்க அது தவறுதலாக ஜெயலலிதாவிற்கு செல்கிறது... இனி

வணக்கம் நான் தலைவர் பேசுகிறேன்..

யார் தலைவர்..? என்னை பொறுத்த வரை தலைவர் என்றால் அது புரட்சித் தலைவர் தான்..

ஓ.. ஜெ.அன்பழகன் தாயாரா..? அம்மா நான் கலைஞர் பேசுகிறேன்..

(இப்போது குரலை ஜெ. கண்டு கொள்கிறார் சில விநாடிகள் தாமதித்து)

நான் அன்பழகன் தாயார் அல்ல... ஆனால் நான் அம்மா தான்..

(கலைஞருக்கு சட்டென்று புரியவில்லை)

தாயார் அல்ல அம்மா என்றால் எனக்கு குழப்பமாக உள்ளதே.?

நீங்கள் தற்போது குழப்பத்தில் இருப்பது தான் உலகிற்கே தெரியுமே.! நான் ஜெயலலிதா பேசுகிறேன்.!

( இப்போது ஒரு சில வினாடிகள் கனத்த மவுனம்.. சுதாரித்து ஆரம்பிக்கிறார் கலைஞர் )

ஓ.. முன்னாள் முதல்வரா.! வணக்கம்.. நீங்கள் நலமா.?

நீங்கள் தான் முன்னாள் முதல்வர் இந்நாளிலும் நான் மக்களின் முதல்வர்..!நினைவிருக்கட்டும்... முன்னாள் மைனாரிட்டி அரசின் முதல்வரே.! 

ஓ..நான் முன்னாள் தான் ஆனால் இந்நாளும் நான் சட்டமன்ற உறுப்பினர். நீங்கள் அது கூட இல்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.!

ஹாஹாஹா.. எனக்கு பதவி போனதால் சட்டமன்றம் போகவில்லை.. உங்களுக்கு தான் பதவி இருக்கிறதே நீங்கள் ஏன் அங்கு போவதில்லை?

அது.. உங்கள் அரசு சட்டமன்றத்துக்குள் என் சக்கர நாற்காலி வண்டி செல்ல சரியான வசதி செய்து தரவில்லை.. அது தான் போகவில்லை..!

ஹாஹாஹா.. எல்லோரும் நொண்டி சாக்கு சொல்வார்கள்.. நீங்கள் வண்டி சாக்கு சொல்கிறீர்கள்..

சகல வசதிகளுடன் என் அரசு கட்டிய சட்டமன்றத்தை மாற்றியதற்கு நீங்கள் சொன்னது நொண்டி சாக்கு என ஒப்புக் கொண்டால் நானும் இதை ஒப்புக் கொள்கிறேன்.

சரி.. சரி.. ஆயிரம் பிணக்குகள் நமக்குள் இருந்தாலும் ஒரு காலத்தில் உங்கள் வசனம் பேசி நடித்தவள் தான் நான்.. உங்கள் உடல்நலம் எப்படி உள்ளது.?

அட.. பரவாயில்லையே இதெல்லாம் நினைவில் வைத்து இருக்கிங்களே..! உடல் சோர்ந்தாலும் என் உள்ளம் என்றுமே சோர்ந்து போகாது அந்தளவில் நான் நலமே.!

நீங்க உடன்பிறப்பே என்று பேச ஆரம்பிச்சு தான் கட்சியை வளர்த்திங்க.! ஆனா
இன்று உங்கள் குடும்பத்து உடன்பிறப்புகளிடையே அது கூட எடுபடவில்லையே.!

ம்ம்.. இங்கேயாவது உடன்பிறப்புகள்.. அங்க உடன் பிறவா சகோதரி ராஜ்ஜியம் அல்லவா நடக்கிறது.. அதற்கு இது பரவாயில்லையே.!

சசி..சசி..மன்னிக்கவும் சரி சரி.. அந்த பேச்சு எதற்கு.! இங்க என் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச ஆள் இல்லை அந்தளவுக்கு கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளேன்!

கடமையும் கண்ணியமும் இல்லாது கட்டுப்பாடு மட்டும் இருந்து என்ன பயன்.? இதைச் சொன்ன அண்ணாவின் பெயரை வேறு கட்சிப் பெயரில் வைத்துள்ளீர்களே.!

நாங்களாவது அண்ணாவை பெயரில் வைத்துள்ளோம்.. நீங்க அது கூட இல்லாமல் மறந்துவிட்டீர்களே.!

யார் சொன்னது ஸ்டாலின் கனிமொழி இருவரையும் கேளுங்கள் அவர்கள் தம் "அண்ணா"வை மறக்காது ஒரு நொடி கூட இருந்ததில்லை.! 

நான் சொன்னது பேரறிஞர் அண்ணா.. உங்கள் வீட்டு பெரிய அண்ணா அல்ல..!

தமிழகத்திலே இதுவரை இப்படி ஒரு ஆட்சி நடந்து நான் பார்த்ததே இல்லை.

உங்கள் பாராட்டுக்கு என் நன்றி..

பாராட்டா.? என்னிடமே நையாண்டியா..? பொறுப்பு முதல்வர் சரியாக செயல் படவில்லை என்பதைத் தான் சொல்கிறேன்..

செயல்படவில்லையா.. நன்றாக அழுதாரே, தாடி வளர்த்தார், முதல்வர் அறைக்குள் போகாமல் இருந்தார், அரசு திட்டங்களில் என் பெயரை நீக்காமல் இருந்தார் இதெல்லாம் செயல்பாடு இல்லையா..?

ஓ.. இதுதான் செயல்படுவதா.! செயல் என்றால் தளபதியை பாருங்கள் அதுதான் செயல்பாடு.!

ஓ... ரஜினியை சொல்றிங்களா.. அவர் தான் வாழ்த்தி செய்தி அனுப்பினாரே.!

ரஜினியை நான் சொல்லவில்லை.. நான் சொன்னது ஸ்டாலினை..!

பாருங்க.. இன்னிக்கு என் ஒரு வழக்கு வாபஸ் ஆன சந்தோஷத்துல உங்ககிட்ட நிறைய பேசிட்டேன்.. சரி.. இனி நாம ஶ்ரீரங்கத்தில் மோதிப் பார்ப்போம்.

நீங்கள் இவ்வளவு பேசியது எனக்கும் ஆச்சர்யம் தான்.! உங்களுக்கு பாடம் புகட்ட பொது அரங்கத்துக்கு வருகிறபோது திருவரங்கத்துக்கு வரமாட்டோமா என்ன.? நிச்சயம் நாங்கள் வெல்வோம்.!

ஆனா உங்களையே இன்னிக்கு போனில் அம்மான்னு சொல்ல வச்சிட்டேனே..! நான் அப்பவே ஜெயிச்சுட்டேன் கலைஞர் அவர்களே..

ஹாஹாஹாஹா.. அவசரத்துல மிஸ்டர் கருணாநிதின்னு சொன்ன உங்க வாயால நான் கேட்காமலேயே கலைஞர்ன்னு உங்களை சொல்ல வச்சிட்டேனே இது எப்படி இருக்கு.? ( போன் துண்டிக்கப்படுகிறது )

கப்ஸா செய்திகளுக்காக.. க்ராஸ் டாக்கில் கேட்டு வழங்கியவர் "சரடு" சரவணன்.

No comments:

Post a Comment