Friday 9 January 2015

ஒலிம்பிக் கனவுகள்..

ஒலிம்பிக்கில் தங்கம் பெற உருப்படியான யோசனைகள்...

உலகின் அதிக மக்கள் தொகையில் 2 வது நாடான நம் இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிக்க..எந்த எந்த விளையாட்டுக்கு யார் யாரை கோச்சிங் பணியில் அமர்த்தினால் நல்லது..! இதோ அரிய யோசனைகள் ஸ்டார்ட்...

ஓட்டப்பந்தயம் : உசேன் போல்ட் ஓடுவதெல்லாம் ஒரு வேகமே அல்ல இவர் அதை விட மின்னலாக மறைவார்.. இவருக்கு அனுபவம் அதிகம், நாட்டில் இவர் ஓடாத ஊரே இல்லை என்று கூட சொல்லலாம், இவர் மட்டும் நம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் உலகளவில் இந்தியாவை ஓட்டப்பந்தயத்தில் அடித்துக் கொள்ள ஆளே இல்லை.! என்பதால்.. நாம் பரிந்துரைக்கும் கோச் : #பைனான்ஸ்_நிறுவனர்

நீளம்/உயரம் தாண்டுதல் : நிச்சயம் இவரது பயிற்சியில் தங்கப்பதக்கம் என்ன வைரப்பதக்கம் இருந்தால் கூட வெற்றி நமக்கு தான்.! நீளமோ அகலமோ உயரமோ தாண்டுவது தாவுவது இதில் வல்லவர்..இவருக்கு இருக்கும் பாரம்பரிய அனுபவம் நம் அணிக்கு சாதகமே.. அதை திட்டமிட்டு மிக அழகாக செய்வதில் அனுபவஸ்தர்..! என்பதால்.. நாம் பரிந்துரைக்கும் கோச் : #கட்சிதாவும்_அரசியல்வாதி

வட்டு/ ஈட்டி எறிதல் : இவர்களைப் போல எறிவதற்கு உலகில் வேறெங்கும் ஆட்கள் இல்லை..ஆனால் இவர்களது திறமை உலகில் மறைக்கப்பட்டுள்ளது..இவர்களின் தலைமையில் அணியை தயார் செய்வதே நாம் இவர்களுக்கு செய்யும் பிராயசித்தம்! குறி தவறாது வீசுவதில் வல்லவர்களான இவர்கள் குறியில் இருந்து எந்தப் பதக்கமும் தப்பாது.! என்பதால்.. நாம் பரிந்துரைக்கும் கோச் : #திருமணமான_பெண்கள்

மாரத்தான் : இவர்களை விட இந்த போட்டிக்கு சரியான கோச் கிடைப்பது மிகக் கடினம்.. இவர்கள் தினசரி காலை எழுந்து ஓட ஆரம்பித்தால் நிற்காமல் மாலை வரை ஓடுவார்கள்.. அலுப்பு சலிப்பு எல்லாம் மரத்துப் போய் ஒரு ஞானி போல ஓடிக் கொண்டே இருப்பார்கள்.. இலக்கு இல்லாது ஓடுவது இவர்களுக்கு கால் வந்த கலை..! என்பதால்.. நாம் பரிந்துரைக்கும் கோச்: #திருமணமான_ஆண்கள்

ஜிம்னாஸ்டிக் : இவர்களது திறமையைக் கண்டால் ஜிம்னாஸ்டிக்கில் கில்லியான ரஷ்யா கூட வாயடைத்து போகும்..குனிவது,வளைவது,கூழைக் கும்பிடு போடுவது, தரையில் விழுவது, அப்படியே உருண்டு போவது என எந்த ஜிம்னாஸ்டிக் கருவிகளும் இன்றி நடுரோடில் கூட இவர்கள் செய்யும் சாகசம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்!என்பதால்..நாம் பரிந்துரைக்கும் கோச் : #அரசியல்_அல்லக்கைகள்

தடை தாண்டுதல் / குண்டு எறிதல் : எதையும் அனாசயமாக தாண்டி அதே நேரத்தில் வீச வேண்டிய நேரத்தில் குண்டு வீசும் களமாடியவர்கள்.. அந்தக் களம் முகனூல்.!
எத்தனை குட்மார்னிங் தடைக்கற்கள் கமெண்ட்டாக விழுந்தாலும் அதை படிக்கட்டுகளாக மாற்றும் படையப்பாக்கள்.! தடைகளை தாண்டி தல தளபதி என குண்டுவீசி அதகளம் செய்யும் இவர்களே இந்த தடகள பயிற்சிக்கு சரியான தேர்வு..! என்பதால்.. நாம் பரிந்துரைக்கும் கோச் : #முகனூல்_போராளிகள்

கற்பனை : விளையாட்டுப் பிள்ளை வெங்கடேஷ் ஆறுமுகம்

No comments:

Post a Comment