Monday 12 January 2015

உன்னி..

"உன்னிகிருஷ்ணன்" சச்சின் போன்ற சுருள் முடி மாநிறம்.. பெண்கள் பொறாமைப்படும் மாதுளைச் சிவப்பு உதடுகள்.. அவன் மலையாளி என்ற போதும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலத்தில்..

நாங்கள் கிச்சிப்பாளையத்து கிரிக்கெட் டீம் அப்போதெல்லாம் ராயல்ஸ், கிங்ஸ், இப்படி பெயர் வைக்கும் வழக்கமில்லை, எங்களது லெவனில் அடிக்கடி ஆள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

நான், குமார்,கண்ணன்,எல்லாம் பாரதிவித்யாலயா மாப்ள தென்றல்மாறன் கோகுல் நாதா, ஆனந்த் செண்ட்பால், பாபு&பாலாஜி லிட்டில் ஃபிளவர்.. சத்யமூர்த்தி, பிரபு, கண்ணன் பாவடி ஸ்கூல்.

நாங்க 10 பேரும் ஒரே தெரு என்பதால் பள்ளிகள் கடந்த சினேகம்.. இந்த பதினோராவது ஆளுக்கு தான் எங்களுக்கு ஆள் அமையவில்லை.. ஆகவே கிடைத்த ஆளுடன் ஆடுவோம்.

மாப்ஸ் தென்றல்மாறன் அறிமுகப்படுத்தியவன் தான் உன்னிகிருஷ்ணன் அவனும் கோகுல்நாதா பள்ளி..அம்மாபேட்டை பகுதியில் இருந்து கிச்சிபாளையத்துக்கு குடி வந்தான்.!

எனக்கு உன்னிகிருஷ்ணனிடம் மிகப்பிடித்தது குளித்த ஈரத்தலையுடன் ரகளையாய் இருக்கும் அந்த சுருள் முடி நெற்றியில் மலையாளிகளுக்கு உரிய சந்தன கீற்று.. பிறகு அந்த உதடுகள்..

சத்தியமாக அவன் பெண்ணாக இருந்திருந்தால் காதலித்து இருப்பேன்..! ஏனெனில் அப்போது அந்த தெருவில் இருந்த மதுமிதா, விஜி, கோமதி இவர்கள் உன்னியை தனியாக சந்தித்தார்களாம்.!

அவர்கள் கேட்டது இது தான்.. எப்படிப்பா உனக்கு மட்டும் இவ்வளவு சிவப்பா இருக்குன்னு!! ம்ம் பெண்கள்..! உன்னியின் மீது உள்ள காதலை விட்டு கிரிக்கெட்டுக்கு வருவோம்.

உன்னி மிதவேக பந்துவீச்சாளன்.. இன்ஸ்விங் அவுட் ஸ்விங் வீசுவதில் கில்லாடி.. இன்னும் சொல்லப் போனால் எங்கள் அணி பவுலர்கள் அனைவருக்கும் அதை சொல்லிக் கொடுத்தவன்.

மாப்ள தென்றல்மாறன் ஃபார்ம் ஆகிவிட்டால் பேய்த்தனமாக ஆடுவான்.. அவனுக்கு பந்து வீசுவதே கடினம் எப்படி போட்டாலும் பந்து பறக்கும் இப்போது தில்ஷன் ஆடும் ஷாட் எல்லாம்..

அவன் அப்போதே ஆடிவிட்டான். எங்கள் பயிற்சியில் அவனை அவுட் ஆக்குபவர்கள் தான் மேட்சில் ஓபனிங் பவுலர்..! நானும் சத்யாவும் தான் அப்போது கபில்& பின்னி போல..!

ஆனால் உன்னி வந்ததும் நிலை மாறியது.. சொல்லிவைத்து மாறனை கிளீன் போல்டு ஆக்குவான்.. அவ்வளவு துல்லியம்.. நான் உன்னி இந்திய அணிக்கு ஆடுவான் என்று நினைத்தேன்.

அவனது யார்க்கர் மிகப் பிரபலம்.. 10 யார்க்கரில் 9 கிளீன் போல்டு நிச்சயம்.. உன்னி,நான்,மாறன் மூவரும் ஒன்றாக இணை பிரியாமல் இருப்போம் ஒன்றாக திரிந்தோம், ஒருநாள் பிரிந்தோம்..!

நான் மதுரைக்கு குடியேற வேண்டிய குடும்பச்சூழல், மாறன் துபாய் வேலை... கண்ணீருடன் பிரிந்தோம்.. உன்னி நீ பின்னி மாதிரி இந்தியா டீமுக்கும் வரணும்டா..!

சொல்லிப் பிரிந்து கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் உன்னி இப்போ மிகுந்த உயரிய இடத்தில் இருக்கிறான்.. ஆம் வானுலகில்.. !  ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரு சாலைவிபத்து..!

அவனை முதன் முதலில் பார்த்தது ஒரு போகிப் பண்டிகையில் என்பது எனக்கு நினைவிருக்கிறது (ஜன13) இன்று அவனது நினைவு.. மாப்ளே உன் மரணச் செய்திதானடா எங்களுக்கு கொடூர யார்க்கர்.. 

அன்புள்ளங்கள் அனைத்தும் க்ளீன்போல்டுடா உன்னி... 

நினைவில் வாழ்கிறாய் மாப்ள




No comments:

Post a Comment