Wednesday 7 January 2015

பாசுரம் - 45

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (45) புத்தகத்திலிருந்து...

45. பேய் பிடித்திருக்கிறதா.?

எந்த ஒரு விஷயத்திலும் பைத்தியமாக இருப்பவனை குறிக்க பேயன் என்ற சொல் பழகி வந்தது. பேய் பிடித்தவர்கள் தான் நடுராத்திரியில் எழுந்து குளிப்பார்கள், சரசரவென்று எழுதுவார்கள்.. பெளர்ணமியில் கடற்கரைக்குச் சென்று உரக்கப் பாடுவார்கள்.. இப்படி மற்றொரு அசாதாரண சக்தி ஒருவனை ஆட்கொண்டால்..

அவனைப் பேயன் என்று சொல்லலாம்.. இப்போது கூட இந்த வார்த்தை "ஃபார்முக்கு வந்துட்டா சேவாக் பேயா அடிப்பான்' போன்ற பிரயோகங்களில் அன்றாடம் வருகிறது. குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் பேயர்களைப் பற்றிப் பேசுகிறார்...

பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசிஎன்
ஆயனே!அரங்கா!என்றழைக் கின்றேன்.
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரா னுக்கே.

உலகப்பற்று உடையவர்கள் எல்லாம் எனக்கு பேயர் போலத் தோன்றுகிறார்கள். நானும் அவர்களுக்கு ஒரு பேயன் போலத் தோன்றுவேன். இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை.'ரங்கா' என்று அழைக்கிறேன். என் பெருமாளுக்கு நான் பித்தனாகி விட்டேன். மிகுந்த பக்தியும் ஒரு பித்துப் பிடித்த நிலைதான்.

Trance என்று சொல்வார்கள். ஒரு கட்டத்தில் தன்னையும் தன் சூழ்நிலையும் மறக்கச் செய்யும். நம் வாழ்வில் எப்போதாவது இந்த நிலை ஏற்படலாம். ஒரு கணம் நம்மைச் சுற்றியுள்ளவை அனைத்தையும் மறந்துபோய் பகவானுடன் ஐக்கியமடையச் செய்யும்.ஒரு கணம்தான்.மறுகணம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு பஸ் பிடிக்க ஓடுவோம். - எழுத்தாளர் சுஜாதா..

No comments:

Post a Comment