Wednesday 7 January 2015

பாசுரம் - 35

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (35) புத்தகத்திலிருந்து...

35, எங்கே போனாள்?

இந்த காலத்து இளம்பெண்கள் நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை என்றால் பெற்றவர்கள் என்னவெல்லாம் கவலைப்படுவார்கள்? பஸ் கிடைக்கவில்லையோ? பர்சை தொலைத்து விட்டாளோ? அல்லது எதிர் வீட்டுப்பையன் ஒருத்தன் இங்கேயே பார்த்துக் கொண்டிருப்பானே அவன் புதிதாக ஸ்கூட்டர் வாங்கியிருக்கிறான்.!

அவன் அதில் அழைத்துச் சென்றுவிட்டானோ? இவள் வீட்டுக்கு வருவதற்குள் எத்தனை மன உளைச்சல்.! இந்த காலத்து பெற்றவர்களின் கவலை இவை. கண்ணன் வாழ்ந்த அக்காலத்தில் மதுராபுரியில் அன்னையரின் கவலைகள் வேறு விதமானவை. பெரியாழ்வாரை கேட்டால் சொல்வார்.

ஒரு தாய் தன் மகளைத் தேடுகிறாள். இந்தப்பெண் எங்கே போய்த் தொலைந்தாள்? வீடே வெறிச் என்று இருக்கிறதே! எல்லாக் கதவுகளையும் திறந்து போட்டுவிட்டு எங்கே போனாளோ? யார் பின்னே சென்றாளோ? அப்படி தன்னை அறியாமல் பின்னே செல்லும்படி இவளை யாரால் கவர முடியும்.?

மல்லர்களோடு ஒரு குழந்தை சண்டை போட்டு ஜெயித்ததாக மதுராபுரியில் பேசிக் கொள்கிறார்களே! அந்தக்குழந்தையைத் தேடி அங்கே தான் போயிருப்பாளோ?

நல்லது ஓர் தாமரைப்பொய்கை
நாண் மலர் மேல் பனி சோர,
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,
அழகழிந்தால் ஒத்ததாலோ!
இல்லம் வெறியோடிற்றாலோ!
என் மகளை எங்கும் காணேன்;
மல்லரை அட்டவன் பின் போய்
மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?

(தாது - உள்ளிதழ் (மொட்டு), அட்டவன் - வென்றவன்)

தாமரைப்பொய்கையில் மலர்களின் மேல் பனி படர்ந்து அல்லி மலரும் மொட்டுக்களும் உதிர்ந்து அழகிழந்தது போல வீடு வெறிச்சோடிப் போயிற்று. என் மகளைஎங்கும் காணவில்லை. மல்லர்களை ஜெயித்தவன் பின் தொடர்ந்து மதுரைக்குப் போய்விட்டாளோ..!

ஒரு வேளை பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை நினைத்துக்கூட இந்தப் பாடலைப் பாடியிருக்கலாம்.

No comments:

Post a Comment