Wednesday 7 January 2015

பாசுரம் - 33

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (33) புத்தகத்திலிருந்து...

33. உங்கள் ஆதிசேஷன் யார்.?

மல்ட்டிபர்ப்பஸ் என்ற வார்த்தைக்கு 'பல்பயன்' அல்லது 'பல்திறன்'என்று தமிழில் சொல்லலாம். மகாவிஷ்ணுவுக்கு அனந்தாழ்வான் என்றுசொல்லப்படும் ஆதிசேஷன் ஒரு மல்ட்டிபர்ப்பஸ் தொண்டர். இராமாயணத்தில் லக்ஷ்மணன்'ராமனுக்கு நான் எல்லாம் செய்வேன்' என்றுசொன்னது மட்டுமின்றி புது மனைவியைப் பிரிந்து, கூடவே காட்டுக்கு வந்து,காவல் காத்து,சீதையிடம் திட்டு வாங்கி, காடெல்லாம் அலைந்து தேடி,சண்டை போட்டு, அசுரனின் அம்பில் ஏறக்குறைய இறந்து.... லக்ஷ்மணனின் சேவையை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

லக்ஷ்மணனை ஆதிசேஷனின் அம்சம் என்றுகூட சொல்லுவார்கள். இந்த சிநேகிதப் பாம்பு திருமாலுக்கு என்னவெல்லாம் செய்கிறது. அவர் நடந்து செல்லும் போது குடையாகிறது. உட்காரும் போது சிம்மாசனமாகிறது, சும்மா நின்றால் கால் செருப்பாகிறது. அவர் பாற்கடலில் துயில் கொள்ளும் போது சொகுசாக மிதக்கும் தெப்பமாகிறது.இரவில் அதன் கண்கள் ரத்தினம் போல ஒளிர்ந்து வெளிச்சம் காட்டுகின்றன. அதனை பட்டாடைப் போல போர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. தலையணையாகவும் கட்டிக் கொள்ளலாம்.

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்(கு) அரவு.

( புணை - தெப்பம், புல்கும் - அணைத்துக் கொள்ளும், அரவு - பாம்பு )

பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் உள்ளது இந்த வெண்பா. இதைத் தொடர்ந்து பிற்காலத்தில் 'கணிகண்ணன் போகின்றான்' எனத் துவங்கும் இரண்டு தனிப்பாடல்கள் ஆழ்வார் ஆணைப்படி பெருமாள் படுத்திருந்தவர் எழுந்து வந்து விட்டார் என்றெல்லாம் சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.

உலகில் பெரிய மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இம்மாதிரி ஓசைப்படாமல் எல்லா கைங்கர்யங்களும் செய்பவர்கள் இருப்பார்கள் - அவர்களை பெரும்பாலும் மறந்து விடுகிறோம். பொதுவாக ஆதிசேஷன் என்று அவர்களை அழைக்கலாமா!?

- எழுத்தாளர் சுஜாதா.

No comments:

Post a Comment