Monday 26 January 2015

யார் கனவுல யாரு..!

#யார்_கனவுல_யாரு

மதுரை ஆதீனம் கனவில் சிவபெருமான் வந்தது (??!!) போல மற்ற அரசியல் தலைவர்கள் கனவில் படையெடுக்கிறார்கள் பலர் (சும்மா கற்பனையா தான்) 

ஜெயலலிதா: என் கனவில் நேற்று..! நீங்கள் வருவீர்களா.. வருவீர்களா.. என்ற குரல் கேட்டு யார் எனப்பார்த்தேன்..! ஹெலிகாப்டரே இன்றி வானத்திலிருந்து ஒரு பெண் இறங்கினார்..! அவர் மேரி மாதா போலவும் இருந்தார் ஜெகமாளும் ஆதிசக்தியாகவும் தெரிந்தார்..! 

அன்பில் கருமாரி.. அன்னை அவள் உருமாறி வந்தது போலவும் தெரிந்தது.. ஆனால் இந்த முகம்.! இந்த முகம்! எங்கு பார்த்தோம் என நான் வியப்போடு யோசித்தேன்.! அடடா இது நம் முகம் அல்லவா.! நம் முகம் எப்படி? என கொடநாட்டில் ரூம் போடாது யோசித்தேன்..!

நமது ரத்தத்தின் ரத்தங்கள் பிளக்ஸ் பேனரிலும், போஸ்டரிலும் அவ்வப்போது நம்மை இப்படி புகழ்வதால் கனவில் வந்தவரும் என்னைப்போலவே தோன்றியது காலத்தின் கட்டாயம்..! அடடா வந்தது நானே தான்...! நானே மக்கள் முதல்வர்.... நானே கடவுள்..! 

ஒரு பெண்ணாக பிறந்து எத்தனை பதவிகள் தான் ஏற்பது என தயங்காமல் அவரை வரவேற்றேன்.! அவரும் என் காலில் விழுந்து நீங்கள் தான் எப்போதும் நிரந்தர முதல்வர் என பெண் சம்பத் போல் கூறி(வி)னார்..! இது போன்ற புகழுரைகளை கொஞ்சமும் விரும்பாத நான்...

போனால் போகட்டும் என விரும்புவது போல நடித்தேன்..! அடுத்து மீண்டும் முதல்வர் நான் தானா என்று அவரிடம் கேட்டேன்..! மதுரை ஆதீனத்தின் கனவில் சிவனே அதை கன்பார்ம் செய்துவிட்டாரே என்பதை எனக்கு இன்பார்ம் செய்தார்..! நீங்கள் ஓடி ஓடி உழைத்தால்.. 

இந்தியாவையே ஆட்சி செய்வீர்கள் என்பதையும் சொன்னார்..! நானும் தர்மத்தின் வாழ்வு தனை விஜய்சேதுபதி படம்..! மீண்டும் ஒரு நாள் தர்மம் கமல் ஆண்ட்ரியா நடித்த படம் என்றேன்..! மகிழ்ந்து போய் பதவியேற்பு விழாவிற்கு வருகிறேன் எனக் கூறி மறைந்தார்.!


மு.க. அழகிரி : கனவில்...

அண்ணனே.. நான் தான் தம்பி வந்திருக்கிறேன்..! 

யாரு ஸ்டாலினா? என்ன தைரியம்..! 

அட இல்லிங்க ப்ரோ.! 

ப்ரோன்னா யாரு நம்ம நடிகர் விஜய்யா? 

அட நாந்தாங்க முழு முதற்கடவுள் முருகன்..! 

ஓ நீங்களா..! நான் கூட எல்லா கட்சிக் காரங்களும் என்னை வந்து சந்திக்கிறாங்க.. இந்த கேப்புல என் தம்பியும் வந்துட்டாரோன்னு பதறிட்டேன்..!

நம் அப்பாக்களின் திருவிளையாடல்களில் பாதிக்கப்பட்டோர் நாமிருவரும் தான் அண்ணா..!

ஆமா முருகா..! உனக்கு உங்க அண்ணன் காரணம்.. எனக்கு என் தம்பி காரணம்..! 

அண்ணா எனக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லை ஆனால் பழனி மலை கிடைச்சது உங்களுக்கு? 

எனக்கு எதுவும் கிடைக்கலை ஆனா... எல்லா கட்சி ஆட்களையும் சந்திச்சு எங்க கட்சியை பஞ்சாமிர்தமாக்க முடிஞ்சது.! உனக்கு "வேல் உண்டு வினை இல்லை" எனக்கு "வேலை இல்லை ஆனா வினை உண்டு"..! 

அண்ணா திருமங்கலம் பார்முலா கொண்டுவந்த நீ இப்படிக் கூறலாமா? தென் மாவட்ட அமைப்பு செயலராக இருந்த நீ இப்படி பேசலாமா? தந்தையை பகைக்கலாமா? தம்பியை எதிர்க்கலாமா? இது நீதியா?

இருப்பா முருகா..! இவ்வளவு சொல்ற நீயும் உங்கப்பா கிட்ட கோவிச்ச ஆளு தானே..!

அண்ணா நான் அப்பனிடம் கோபித்தேன்.! ஆனால் அவருக்கு பாடம் சொன்ன சுப்பன் அல்லவா நான்.! 

ஹஹ்ஹா நானும் உன்னைப் போல் நானும் அப்பாவுக்கு பாடம் கற்பிக்கிறேன் விரைவில்.! பொறுத்து இருந்து பாரு இந்த சூரனின் சம்ஹாரத்தை.! (முருகன் மறைகிறார்)

சோனியா : 

(கனவில் வந்தவர்) அன்னையே இப்படி ஆகிவிட்டதே..! நீங்கள் அன்று பிறந்திருக்கக்கூடாதா? 

ஹு ஆர் யூ மேன் ?  

நான் தாங்க ராவணன்..!  

வேர் ஆர் யூ ப்ரம்?

தாயே நான் இலங்கையிலிருந்து வருகிறேன்..! 

ஓ ராஜபக்ஷே அனுப்பிச்சாரா? 

ஐயோ இல்லிங்க மேடம் அவரே துண்டைக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடிகிட்டு இருக்காரு.. நான் யாருன்னா முன்னாடி பல ஆயிரம் வருஷத்துக்கு முன் அங்க ஆட்சி செய்தவன்.. இராமாயணம் படிச்சு இருந்தா தெரிஞ்சு இருக்கும்...

ஓஓ... மிஸ்டர் ராவணன் யெஸ் நான் கேள்விபட்டு இருக்கேன்..!

நீங்க மட்டும் என் காலத்துல இருந்து ஆதரவு தந்து இருந்தா அந்த ராமரை நான் ஜெயிச்சு இருப்பேன்..! ஆனா ஒண்ணு இந்த ராமரை ஆதரிக்கற ஆளுங்க அன்னைக்கு எனக்கு எதிரி..! இன்னைக்கு உங்களுக்கு எதிரி..! 

யெஸ் மிஸ்டர் ராவணன் எக்சாட்லி..! எங்களுக்கு பட்டாபிஷேகத்துக்கு பதிலா பட்டை நாமம் போட்டுட்டாங்க நாட்டு மக்கள்.! நான் வெளிநாட்டில் பிறந்தாலும் இந்தியர் ஒருவரைத் தானே மணந்தேன்.. அவர் கட்டிய தாலிக்கு மதிப்பளித்து தானே வந்தேன்.. சொல்லுங்க.... இத்'தாலிக்கு மதிப்பளித்தது தப்பா.?

அன்னையே ஏன் விரக்தியாக பேசுகிறீர்கள்.? நீங்கள் இத்'தாலிக்கு மட்டுமே உழைத்தீர்கள்..! ஆனால் மக்கள் தான் அதை தவறாக புரிந்து கொண்டனர். கவலைப்படாதிர்கள் உங்களுக்கு இனி ஜெயம் உண்டு..! 

இப்படி யாராவது பேசினால் தான் கொஞ்சம் ஆறுதலாவது கிடைக்கிறது மிஸ்டர் ராவணன்..! 

நன்றி தாயே எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமா?

ஓ.கே மிஸ்டர் ராவணன்.! நீங்க காங்கிரஸில் சேர ரெடியா.? 

சேர்ந்து என்ன செய்யணும்..?

ஒண்ணும் செய்யவேணாம் நான் சொன்னதை செஞ்சா போதும்.!

அதை நீங்களே செய்யலாமே அன்னையே.?

எனக்கு இயக்கத்தான் தெரியும் ஒரு தலை இருக்க மன்மோகனே நல்லா தலையை ஆட்டினாரு.. உங்களுக்கு பத்து தலை ஆட்டமாட்டிங்க..! ஹலோ..ஹலோ..
(அட ஏன் இவர் 10 தலையும் தெறிக்க ஓடுறாரு...!)


ராகுல்காந்தி கனவில்...

நேற்று எனக்கு ஒரு குட்டிக்கனவு தமிழகத்தில் நடப்பது போல்.! அதில் கடவுள் யாரும் வரவில்லை.. எங்களுக்கு கடவுளாய் தெரியும் தமிழக மக்கள் நிறைய வந்தார்கள்.! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் ஏழ்மையை ஒழிக்காமல் இருக்கும் இயக்கம் எமது காங்கிரஸ் பேரியக்கம்..! 

அந்த இயக்கத்தின் பல ஆணிகளில் ச்சே... ஆணிவேர்களில் ஒருவரான சிதம்பரம்ஜியின் தொகுதிக்குள் நிற்கிறேன்..! சுற்றிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் (இது கனவு என்பதால் ஏற்றுக்கொள்ளவும்) ஏராளமான மூதாட்டிகள் முகத்தில் மகிழ்ச்சியோடு "கை" அசைத்தார்கள்...! 

நானும் கை அசைத்துக் கொண்டே..கார்த்தி சிதம்பரம்ஜியிடம் யார் இவர்கள் என்றேன்.! இவர்கள் எங்கள் ஊர் ஆச்சிமார்கள் என்றார்.. வழக்கம் போல் பாதுகாப்பு வளையம் தாண்டி அவர்களுடன் கை குலுக்க மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தேன்!

அவர்கள் அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.!கனவும் கலைந்தது.! ஒரு உண்மையும் உறைத்தது..! ஒரு ஆச்சியை கூட பிடிக்க முடியாத நம்மால் எப்படி.! ச்சே...அத எப்படிங்க என் வாயால சொல்லுவேன்..!

No comments:

Post a Comment