Wednesday 7 January 2015

பாசுரம் - 24

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (24) புத்தகத்திலிருந்து...

24. அந்தணன் யார்?...

தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. "ஐயர்" என்ற சொல் சங்க காலத்தில் 'தலைவர்' என்ற பொருளில் தான் பயின்று வந்தது. இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது. 'அந்தணன்' என்ற சொல்லும் அப்படி காலப் போக்கில் பொருள் மாறி வந்துள்ளது. இதோ திருக்குறளை பாருங்கள் தெரியும்..!

திருக்குறள் 'அறவாழி அந்தணன்' என்று கடவுளைக் குறிக்கிறது. மற்றொரு குறளில் 'அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்' என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணன் என்றது. இந்த உயர்ந்த பொருளில் தான் திருமங்கையாழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் இந்தப் பாடலில் அந்தணனைப் பயன்படுத்தியுள்ளார்...

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் - தன்னை
இருநிலம்,கால்,தீ,நீர்,விண்,பூதம் ஐந்தாய்,
செந்திறந்த தமிழ் ஓசை வடசொல் ஆகி,
திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
அந்தணனை,அந்தணர் மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை,மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம்,மடநெஞ்சமே!        (கால் -காற்று)

இந்திரனுக்கும் பிரம்மனுக்கும் முற்பட்டவன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்று ஐம்பூதங்களாய் தமிழ் ஓசையாய் வடசொல்லாய் நான்கு திசைகளாய் சூரியச் சந்திரராய் தேவலோகத்தில் உள்ள தேவர்களாலும் அறிய முடியாத அந்தணன் (சிறந்தவன்) அவனை மந்திரங்கள் சொல்லி மறக்காமல் தினம் வாழ்த்தினால் நீ வாழலாம் என் பேதை நெஞ்சமே.!

எண் சீர்விருத்தம் என்னும் விரிவான வடிவம் கொண்ட 30 பாசுரங்கள் கொண்டது திருநெடுந்தாண்டகம். திருமங்கையாழ்வாரின் புலமைக்கும் பக்திக்கும் ஒரே சமயத்தில் ஈடு கொடுக்கும் பாடல்கள் அவை.

-எழுத்தாளர் சுஜாதா.

No comments:

Post a Comment