Tuesday 6 January 2015

கி.பி2214

கி.பி.2214..

சென்னை பரபரப்பாக விடிந்திருந்தது ரோபோ கான்ஸ்டபிள்கள் போக்குவரத்து சிக்னல்களாகவே செயல் பட்டுக்கொண்டிருந்தனர்.. இன்றைக்கு சாலைப் போக்குவரத்து தினம்..! வான் வெளி போக்குவரத்து தடை செய்யப்பட்ட நாள்... மக்களும் தங்கள் ஹெலி டாக்சிகளை Road Modeக்கு மாற்றி இருந்தார்கள்..

எல்லோரும் பரபரப்பாக ஆவலாக சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் முகத்தில் மிகப் பெரும் ஆச்சர்யம் பொங்கிக் கொண்டிருந்தது.. இதயம், மூளை, கை, கால் போன்ற மாற்று உடல் உறுப்புகள் விற்கும் அரசு மெடிக்கல்களில் புதிய கண்கள் வாங்கி பொருத்திக் கொள்வதில் பெரும் கூட்டம் நின்றிருந்தது..!

எல்லோரும் எதையோ பார்க்க போகும் பரபரப்பு அந்த நகரின் காற்றில் கலந்திருந்தது... "நீ பார்த்துட்டியா? நிஜம் தானா? எப்படி இருந்தது? தொட்டு பார்த்தாயா? தொட அனுமதித்தார்களா? இப்படியான கேள்விகள் தான் ஒருவருக்கு ஒருவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளாக இருந்தது..!

21 ஆம் நூற்றாண்டின் அரிய பொருள் ஒன்றை பொது மக்கள் பார்வைக்கு அரசு அருங்காட்சியத்தில் வைத்து இருப்பதை தான் அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருந்தனர்.. இன்று தான் கடைசி தினம் அதை பார்வையிட.. பொது மக்கள் கூட்டம் கூட்டமாக அருங்காட்சியகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்...!

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் சாலைக்கு 2 கி.மீக்கு முன்பே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.. எங்கும் இராணுவ வீரர்கள் தலைகள் தான் ஹை டெக் லேசர் துப்பாக்கிகளுடன் ரோந்து வந்து கொண்டிருந்தனர். வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தது..ஏலியன் ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டு வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

அந்தப்பகுதி முழுவதும் பாதுகாப்பு, பாதுகாப்பு, பாதுகாப்பு... அருங்காட்சியத்திற்கு ஒரு கி.மீக்கு முன்பே மக்கள் கூட்டம் நீநீநீநீநீநீநீநீண்ட வரிசையில் காத்திருந்தது.. அனைவரின் முகத்திலும் விவரிக்க முடியாத உணர்வுகள்.. மெல்ல காய்கறிப் புழு போல் கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.. பார்த்தவர்கள் எதிர்புறம் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அவர்கள் முகங்களில் நம்ப முடியாத பரவசம்.!

அந்த பொருள் அணுகுண்டால் கூட சிதைக்க முடியாத சிலிக்கான்ஃபுரூப் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்தது.. கண்ணை உறுத்தாத அதே நேரம் பிரகாசமான விளக்கொளியில் பளீரென தென்பட்டது அப்பொருள்..ஒவ்வொரு பார்வையாளருக்கும் 5 வினாடிகள் மட்டுமே பார்வை நேரம்.. !

பார்வையாளர் நின்று பார்க்க உயரமான ஒரு மேடை.. அதில் ஒருவர் தான் நிற்கமுடியும் கை குழந்தைகள் உள்ளவர்கள் மட்டும் குழந்தையோடு நிற்க அனுமதி.. அதோ அந்த பெண்மணி தன் 2 வயது குழந்தையோடு நின்று சொல்லிக் கொண்டிருந்தாள்.."அதோ பார்.. அது தான் நம் முன்னோர்கள் உண்டு உயிர் வாழ்ந்த பொருள்" என்று.. 

அந்த ஒளி வெள்ளத்தில் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் தெரிந்தது.. #ஒரு_கைப்பிடி_அரிசி...

No comments:

Post a Comment