Saturday 24 January 2015

ஒபாமா வந்தாச்சு - 6

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 6 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஓபாமாவின் அதிநவீன "பீஸ்ட்" கார் தாஜ்மஹால் அருகில் வந்து நின்றது.! சுற்றிலும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் புடை சூழ நடந்தவர்.. ஒரு கணம்  தாஜ்மஹாலை நிமிர்ந்து பார்த்தார்.. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அது தான் உலகின் முதல் "ஒயிட் ஹவுஸ்" என்பது அவர் நினைவில் வந்து போனது.!

மிச்சேலுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி.. இது தன் காதலிக்கு ஷாஜகான் கட்டிய மாளிகையா அல்லது சமாதியா என்ற சர்ச்சைகளில் எல்லாம் கவனம் செலுத்தாது தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க விரைந்தனர். ஒபாமா வருகைக்காக அதன் சுற்றுப் புறங்கள் சுத்தப் படுத்தப்பட்டு இருந்ததை ஓரக்கண்ணால் கவனித்தனர்.!

இதைப்போல அதிபர்கள் அடிக்கடி வந்தால் எனக்கும் நல்லது என்று தாஜ்மஹாலும் கவனித்தது. தாஜ்மஹாலின் பின்புறம் ஓடிய யமுனையும் கொஞ்சம் சுத்தப்படுத்தப் பட்டிருந்தது. ஷாஜகானின் மனைவி பெயர் நூர்ஜஹானா மும்தாஜா என்ற குழப்பத்தில் ஷாஜகான் மனைவி பெயர் என்ன எனக்கேட்டார் ஒபாமா.!

ஒரு வட இந்திய அதிகாரி சட்டென நூர்ஜஹான் எனச்சொல்ல..அப்போ மும்தாஜ்.. அவங்க மல மல மருதமல பாட்டுக்கு ஆடினவங்க என்றார் ஓரு தமிழக பேட்ச் அதிகாரி. அது என்ன என கேட்ட போது சுதாரித்துக் கொண்ட அதிகாரி அது  வந்து மர்த் என்ற பளிங்கு மலையில் இருந்து கல்லெடுத்து கட்டியது தான் தாஜ்மஹால்.!

என்று சமாளித்தார். பப்பு ஐ லவ் யூ,ரோஷன்& கிரண் ஹார்ட்டின், தருண்&மஹிமா மேரா தில், பூனம்& சோனு போன்ற ஏழை இந்தியக்காதலர்கள் தாஜ்மஹால் கட்ட வசதியில்லாததால் ஷாஜகான் கட்டிய மாளிகையில் தங்கள் பெயரை பொறித்து எதிர்கால வரலாற்றில் தாங்களும் இடம் பிடிக்க துண்டு போட்டு இருந்தார்கள்.!

ஒபாமாவிடம் அதெல்லாம் அந்த தாஜ்மஹால் கட்டிய கொத்தனார்களின் பெயர்கள் என்று நம் அதிகாரிகள் அடித்து விட்டுக் கொண்டிருக்க.. எல்லாம் ஏற்கனவே தெரிந்த ஒபாமா ஒன்றும்தெரியாதது போல் கேட்டுக் கொண்டே வந்தார். அங்கு நின்று படம் எடுத்துக் கொண்டனர் அமெரிக்கர்கள் அனைவரும்.

வழக்கம் போல செல்ஃபி பிரியரான ஒபாமா வரிசையாக செல்ஃபி எடுத்துத் தள்ள அவருடன் வந்திருந்த அனைவரும் எடுத்து மகிழ்ந்தனர்.. ஷாஜகான் மும்தாஜ் ஆவிகள் தவிர அத்தனை பேருடனும் அவர் படம் எடுத்துக் கொண்டார். குறிப்பிட்ட இடத்தில் நின்று கையை உயர்த்தினால் தாஜ்மஹால் உச்சியை தொடலாம்...

என்றபோது அங்கும் போய் படம் எடுத்துக் கொண்டனர். ஒரு அழகிய சிறிய மினியேச்சர் தாஜ்மஹாலை தன்னுடைய மும்தாஜான மிச்சேலுக்கு பரிசளித்தார் ஓபாமா.! கண்ணில் காதல் மின்ன அதை வாங்கிக் கொண்டார் மிச்சேல்.. இந்நேரம் எதாவது ஒரு சினிமா டைரக்டர் இங்கிருந்து இக்காட்சியைப் பார்த்திருந்தால்..

தாஜ்மஹாலில்"ஓ மை மிச்சேல் நீ தான் மை கேர்ள்"என்று இருவரையும் டூயட் பாடி ஆட விட்டிருப்பார்.. நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.தாஜ்மஹாலை விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினார்கள் இருவரும்.. நாளை அமெரிக்கா திரும்புகிறார்கள் நாளை அவர்களை வழியனுப்ப.. (தொடர்வோம்)

No comments:

Post a Comment