Wednesday 21 January 2015

செம்மொழி - சுஜாதா

#சுஜாதாவின்_ஆளுமை..

தமிழ் அன்றும் - இன்றும் - 8

செம்மொழி என்றால் என்ன.? உயிர் வாழும் அவசரங்களிலும், கவலைகளிலும் தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் சராசரித் தமிழனைக் கேட்டால், செம்மொழியா.? எதோ சொல்லிக்கிடறாங்க! அவங்க சொன்னா நல்லாத்தான் இருக்கும், ஆளை விடுங்க 23B வந்துருச்சு.. ஓடிவிடுகிறார்கள்.! பிரபல பத்திரிக்கை ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் இக்கேள்விக்கு கிண்டலாக அளிக்கப்பட்ட பதில் என்ன தெரியுமா.?

சிவப்பான நம் பம்பாய் நடிகைகள் பேசும் தமிழே செம்மொழி எனப்படும் என்று நக்கலடித்து இருந்தார்கள். சரி இவ்வளவு பேசுகிறாயே உனக்கு தெரியுமா என்ற நியாயமான கேள்வியை நீங்கள் என்னைக் கேட்கலாம். அதனால் என் கருத்தில் செம்மொழி என்றால் என்ன என்பதை முதலில் அறிவித்து விடுகிறேன். குறிப்பாக அறிஞர்கள் மத்தியில் கழாக்காலுடன் பேதை புகுந்தாற்போல ஆகிவிடக்கூடாது.

செம்மொழி பற்றி நாளையும் தொடரும் #சுஜாதா (வரும்)

#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 9

செம்மொழி என்றால் என்ன?என் கருத்தில் இதற்கு அளிக்கும் பதில்.. ஆங்கிலத்தில் கிளாசிக்கல்'என்பதற்கு ஈடான சொல்லாக செவ்வியல் பண்பைச் சொல்கிறார்கள். தமிழின் செம்மை, நிறம் சார்ந்தது அல்ல; குணம் சார்ந்தது. செம்மை என்பதற்கு முதிர்ச்சி, பக்குவம் என்பது அகராதிப் பொருள். செந்தமிழ் என்பதிலும் இந்த வழக்கு தான்.ஒரு மொழி ஓரளவுக்கு பக்குவமும் முதிர்ச்சியும் அடைய முதல் தேவை- காலம்.

நேற்று வந்த ஜாவா மொழியை செம்மொழி என்று சொல்லமுடியாது. அந்தளவில் தமிழுக்குப் பழமையான மொழி;மிகப்பழமையான மொழிச் சான்று. மைய அரசு ஆயிரம் ஆண்டுகள் என்று சொன்னாலும், இரண்டாயிரம் ஆண்டு காலமாக அதற்கு இலக்கியம் இருப்பதை மேல்நாட்டு அறிஞர்கள் அறிவார்கள். எனவே முதிர்ச்சி அடைய போதிய காலம் கடந்துள்ள மொழி தமிழ். முதிர்ச்சி மட்டும் போதாது.

இலக்கியமும் வேண்டும்.. அது பற்றி நாளை #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 10

ஒரு மொழி முதிர்ச்சியடைய காலம் மட்டும் போதாது,இலக்கியமும் வேண்டும். இலக்கண முதிர்ச்சி விதிகள் என்று மொழியியலாளர்கள் அடையாளம் காட்டும் தகுதி வேண்டும். ஓர் உதாரணம் சொல்கிறேன் தமிழில் ஆண்பால் பெண்பால் பகுப்பதில் குழப்பமேயில்லை. ஆண் ஆண்தான், பெண் பெண்தான். மற்றதெல்லாம் அஃறிணை. சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் அஃறிணை கிடையாது.

அதனால் ஸ்திரீலிங்க,புல்லிங்க பாகுபாடு தன்னிச்சையாக ஓசை சார்ந்தே உள்ளது. இதனால் கால் விரல்கள் ஒரு பாலாகவும் கைவிரல்கள் மற்றொரு பாலாகவும் கருதப் படும் வினோதங்கள் மொழியில் ஏற்படுகின்றன. இவ்வகையிலான ARBITRARINESS தமிழில் இல்லை.இது இலக்கணத்தின் முதிர்ச்சிக்கு ஓர் உதாரணம். இரண்டாவது தகுதி தொடர்ச்சி.. அது பற்றி நாளை. #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 11

ஒரு மொழி பக்குவமடைய முதிர்ச்சி ஒரு தகுதி அடுத்த தகுதி தொடர்ச்சி. கிரேக்கம் லத்தீன், சமஸ்க்ருதம் போன்றவையும் செம்மொழியாக கருதப்படுகின்றன. கிரேக்க மகா காவியமான இலியட் நவீன கிரேக்கர்களுக்கு சுத்தமாகப் புரியாது.! லத்தீனும் சமஸ்க்ருதமும் மொழியியலாளர்களுக்கு மட்டுமே புரியும். இம் மொழிகள் வழக்கொழிந்து தம் அன்றாடத் தன்மையை இழந்து விட்டன. தமிழ் அப்படியில்லை.!

2000ஆண்டுகளுக்கு முன் எழுதிய சங்கப்பாடல்களை.. நாம் இப்பொழுது படித்தாலும் முழுமையாக இல்லாவிடினும் ஏறக்குறைய புரிகிறது. 

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரளவு இன்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே.

இந்தப் புறநானூற்றுப் பாடலில் ஓரிரு வார்த்தைகளை நவீனப்படுத்திவிட்டால் அது இன்றைய தமிழாகிவிடும். மற்றபடி 2000 ஆண்டுகள் கடந்து முடிந்தாலும் ஓரளவுக்கு புரிந்து கொள்ளக்கூடிய மரபு தொடர்ச்சி தமிழுக்கு உள்ளது. அன்றைய சங்கத்தமிழ்  இன்றையத் தமிழ் பற்றி நாளை. #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 12

இன்றையத்தமிழ் சங்ககாலத் தமிழல்ல. ஆனால் தமிழ்மொழி தன் மரபுத் தொடர்ச்சியைக் கைவிடாமல் மாறிக்கொண்டும் வந்திருக்கிறது. மெல்ல மெல்ல தன்னை எளிதாக்கிக் கொண்டு வந்திருக்கிறது. மேகத்துக்கு இருபத்தேழு சொற்கள் இருந்தன. இப்போது மேகம் முகில் இரண்டு சொற்கள் தான் மிச்சம் இருக்கிறது.
கொண்மூ, எழினி போன்ற சொற்கள் எல்லாம் கைவிடப்பட்டது. 

அலங்கல்,தெரியல்,பிணையல்,தார், கண்ணி, தொடையல் எல்லாம் வழக்கொழிந்து தற்போது மலர்மாலை மட்டுமே மிச்சமுள்ளது. புதிய வார்த்தைகளையும் தேவைப்பட்டபோது சற்றுத் தயக்கத்துடன் தமிழ் எடுத்துக் கொள்கிறது. இணையம், மென்பொருள், சைக்கிள், ரயில் போன்ற வார்த்தைகள் உதாரணம். தமிழ் மொழியின் தொன்மை குறித்து நாளை பார்க்கலாம். #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 13

தமிழ்மொழியின் தொன்மை குறித்து அதிகம் சந்தேகத்துக்கு இடமின்றி, தமிழ்ச் சங்க நூல்களிலேயே இருக்கும் உள்சாட்சியங்கள் internal evidences தெளிவாகத் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ்மொழி கிமு 2ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரை பண்பட்ட இலக்கிய நூல்கள் கொண்டதாக உள்ளது. தமிழ்மொழி பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் பல சான்றுகள் உள்ளது.

இதனால் இதன் பழமையைப் பற்றி கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. பெரிப்ளுஸ், டாலமி,பிளினி போன்றோரும் தமிழ்மொழியைப்பற்றி தம் குறிப்புகளில் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் விட 2000 ஆண்டுகளுக்கு முந்தையத் தமிழன், இன்றையத் தமிழனோடு பேசினால் ஓரளவு புரியும். உலகின் மற்ற செம்மொழிகளுக்கு இந்தத் தகுதி இல்லை என்பதால்.... 

அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா நூல் பற்றி...நாளை.. #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 14

நான் திரும்ப திரும்ப அவ்வப்போது படிக்கும் நூல் அ.கி.பரந்தாமனாரின் "நல்ல தமிழ் எழுத வேண்டுமா" எனும் நூலே.! பச்சையப்பன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த பரந்தாமனாரின் இப்புத்தகம் என் கருத்தில் பிழையின்றி தமிழ் எழுத உதவும் மிகச்சிறந்த நூல் என்பேன்.

எளிய உரைநடையில் இலக்கணத்தை எவரும் புரிந்து கொள்ளுமாறு எழுதியுள்ளார். பல சமயங்களில் நாம் மனதில் கொண்டிருக்கும் பிரயோகம் தப்பாக இருக்கும். அவைகளைக் குறிப்பாக சொல்லிக்காட்டும் போது தான், பழக்கத்தினாலும் அலட்சியத்தினாலும் செய்யும் தவறுகள் தெரிய வருகின்றன. உதாரணமாக- 

கைப்பற்றுதல், வலிய எடுத்துக் கொள்ளுதல், கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல். திருடனிடமிருந்து திருட்டு நகையைக் கைப்பற்றிய காவலர் தினம் 5மணிக்கு எழும் பழக்கத்தைக் கைக் கொண்டிருக்கலாம். கைப்பற்றுதல் என்பது நாளடைவில் தான் பொருள் மாறி அதில் வன்முறை சேர்ந்திருக்க வேண்டும்.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் "கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்"என்னும் போது எந்தவிதத்திலும் கட்டாயத் திருமணம் இல்லை.

இன்னும் பல சுவையான வார்த்தைகள் நாளை #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 15

'சென்னையில் இருந்து பத்து புத்தகங்களை வரவழைத்தேன்'என்பது தப்பு. வரவழைப்பது ஆசாமிகளுக்கு. புத்தகங்களுக்கு வருவித்தேன் என்று சொல்ல வேண்டுமாம்.! சென்னையிலிருந்து நம் தாயாரை வரவழைக்கலாம் புத்தகங்களை வருவிக்க வேண்டும். தன் இடத்தில் ஒருவரை வரச்சொல்லுதல் - வரவழைத்தலாகும். 

'சென்ற வகுப்பில் படித்தீர்கள்' என்று சொல்வது தப்பு. 'முன்வகுப்பு' என்றுதான் சொல்ல வேண்டும்.'இந்தப்படம் எத்தனை அழகாக இருக்கிறது' என்பது தப்பு.!
'எவ்வளவு அழகு' தான் சரி. எத்தனை என்பது எண்ணிக்கையை குறிக்கும். 

அழகு எண்ணிக்கையற்றது. பழக்கவழக்கம் என்பதையும் அடிக்கடி தவறாக பயன்படுத்தும் வழக்கம், மன்னிக்கவும் பழக்கம் பலரிடம் உள்ளது. பழக்கம் தனிமனிதனைச் சார்ந்தது. வழக்கம் சமூகத்தை! ஒருவன் மட்டுமே சிகரெட் பிடித்தால் அது பழக்கம். ஒரு சமுதாயத்தினரே பிடித்தால் அது வழக்கம்.!

இந்த தொடரைப் படிப்பது உங்கள் பழக்கம் என்றால்... வழக்கம் போல நாளை சந்திப்போம். #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 16

எனக்கு பல முறை 'அல்ல' , 'இல்லை' வார்த்தைகளில் குழப்பம் வரும். 'நான் சொன்னது அல்ல' என்றால், 'நான் சொன்னது வேறு'என்று அர்த்தம். 'நான் சொன்னது இல்லை' என்றால், நான் சொன்ன சமாச்சாரம் அந்த இடத்தில் கிடையாது என்று அர்த்தம். இப்போது 'அல்ல'இல்லை' குழப்பம் போயிற்றா.!

சிலசமயம் கலாச்சார வேறுபாடுகளால் விபரீத அர்த்தம் ஏற்படும். சென்னையில் 'நடப்பு' என்பது தாலியறுக்கும் நாளைக் குறிப்பிடும்.!ஆகவே சென்னை செய்தித்தாள்களில் 'நாட்டு நடப்பு' என்கிற தலைப்பு கூடாது. செட்டி நாட்டில் 'பந்தல்' என்ற சொல் பிணம் கிடக்க நீத்தார் கடன் செய்யும் இடத்தை குறிக்குமாம்.

இங்கு மணப்பந்தல் என்றால் மணப்பந்தல், பிணப்பந்தல் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இடமறிந்து, பொருளறிந்து, எழுத பரந்தாமனார் சொல்லும் வழிகள் உங்களுக்கு மிகவும் பயன்படும். சிலர் பரந்தாமனாரைப் படித்தால் எழுதுவதையே நிறுத்திவிடும் சாத்தியமும் உள்ளது.! 

தமிழ் செம்மொழியானதால் பயன் என்ன..? நாளை... #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 17

மேல் நாட்டினர் செம்மொழியாக கருதுவது புராதன கிரேக்க லத்தீன் மொழிகளை.! இதனுடன் ஒரு சிலர் ஹீப்ரு, சீனம், சமஸ்க்ருதம் போன்ற மொழிகளையும் சேர்த்துக்  கொள்கின்றனர். பல்கலைக்கழகங்களிலும் சொல்லித்தருகிறார்கள். ஆராய்ச்சிக்கு நிதி தருகிறார்கள். சரி தமிழ் செம்மொழி ஆக ஏன் இவ்வளவு போராட்டம்.?

சிகாகோ,பர்க்லி,பென்சில்வேனியா போன்ற பல்கலைக்கழகர்களுக்கும், விஷயம் தெரிந்தவர்களுக்கும் தமிழ் செம்மொழி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்தியத் துணைக்கண்டத்திலிருப்பவர்களுக்குத் தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டியிருக்கிறது. அது தான் நிகழ்ந்திருக்கிறது.!

செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதால், பல பல்கலைக்கழகங்கள் தமிழையும் தங்கள் மொழியியல் சார்ந்த பாடங்களிலும் ஆராய்ச்சிகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் வேறு என்னென்ன கவனிப்பார்கள்.? தமிழினத்தின் கலாச்சார வேர்களை ஆராய்வார்கள். 

இன்னும் நாளை... #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 18

தமிழ் செம்மொழியானதால் உலக பல்கலைக்கழகங்கள் அதை ஆராய்ந்து அவர்கள் மொழியோடு ஒப்பிடுவார்கள். நவீன மொழிகளின் குறிப்பாக திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புகளுக்கும், வாக்கிய அமைப்புகளுக்கும் செம்மொழியில் அடையாளங்களை தேடுவார்கள். வேர்ச் சொற்களை ஆராய்வார்கள்.

அந்தச் சொற்கள் எப்படி நவீன இந்திய, உலக மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளில் பரவின; மாறின என்பதைப்பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளி வரும். செம்மொழியாகத் தமிழைப் படிப்பவர்களுக்கு மற்ற மொழிகளில் அவர்களின் திறமை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை ஆராய்வார்கள்.

செம்மொழி இலக்கியங்களையும், இலக்கணங்களையும், அதன் கலைகளையும், பண்பாட்டையும் உன்னிப்பாக கவனிக்கும் போது பல புதிய உண்மைகள் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும். உதாரணமாக: சிலப்பதிகாரத்தில் 
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றைப் பற்றி வருகிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா.!!!!! 

அது பற்றி நாளை... #சுஜாதா (வரும்)


#சுஜாதாவின்_ஆளுமை

தமிழ் அன்றும் - இன்றும் - 19

சிலப்பதிகாரத்தில் இன்றைய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பின் முன்னோடியான செய்தி.!!! அதிலுள்ள ஐவகை மன்றங்களில் இந்திரவிழா எடுத்த காதையில் வெள்ளிடை மன்றம் என்ற ஒன்றில் ஒரு வருணனை வருகிறது, நம்மை வியக்க வைக்கிறது. புகார் நகருக்கு வரும் புதியவர்கள் பல இடங்களில் தங்குவார்கள்.!

அவர்கள் தலைச்சுமையை இறக்கி, பெயர் ஊர் எல்லாம் குறிப்பிட்டு சரக்குப் பொதிகளை விட்டுவைத்து, எவ்வித பாதுகாப்பும் இன்றி ஊர் சுற்றப் போய் விடுவார்களாம்.! அவைகளை யாராவது கவர்ந்து செல்ல முயன்றால், 'திருடன்.. திருடன்' என்று கூவி, நான்கு காதம் வரை கயிற்றால் அவர்களைச் சுண்டி...

எழுப்பும் பூதம் ஒன்று பிரயாணிகளின் மூட்டைகள் உள்ள அச்சதுக்கத்தில் இருப்பதாக செய்தி உள்ளது.! இதை நவீன கார்த் திருடர்கள் வாகனத்தின் மேல் கை வைத்தால் ஊளையிட்டு ஊரைக்கூட்டும் 'பர்க்ளர் அலார்ம்'உடன் ஒப்பிடலாம். இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் உள்ள நவீன செய்திகள் ஆராயப்படும்.!

மீண்டும் நாளை... #சுஜாதா (வரும்)

















No comments:

Post a Comment