Thursday 8 January 2015

சாப்பாட்டு ராசிபலன்..

மதுரையில் உங்கள் ராசி பலனுக்கு ஏற்றபடி தோசை - செய்தி

இனி நாமும் சாப்பாடுக்கு ராசிபலன் சொல்லலாமா..(கற்பனை)

மேஷ ராசி நேயர்களே.. நீங்கள் பழைய சாதத்தையே பால் சோறாக சாப்பிடுவீர்கள் ஆனால் இன்று உங்களுக்கு பால் சோறே பழைய சோறாகத்தான் கிடைக்கும்.. மனைவி சமையலை பேஸ்புக்கில் கிண்டலடித்து ஸ்டேட்டஸ் போட்டு அதை படித்த யாரோ உங்கள் மனைவியிடம் போய் சொல்லி.. உங்கள் சோற்றில் மண் அள்ளி போடக்கூடும்.. ஸ்டேட்டஸ் போடாதிங்க அப்புறம் சோறு போட மாட்டாங்க..!

ரிஷப ராசி நேயர்களே.. ரிச்சான உங்கள் ராசிக்கு இன்று சத்தான சாப்பாடு.. மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்படும் அதனால் உங்கள் நலன் காக்கப்படும்.. உப்பு சப்பில்லாது சாப்பிட்ட உங்களுக்கு இன்று வீட்டுச் சாப்பாட்டில் இருந்து விடுதலை.. அதுவும் நெடு நாள் நண்பர் ஒருவர் ஓசியில் 5ஸ்டார் ஓட்டலில் விருந்து தரும் யோகமும் உண்டு.. வீட்டில் ஏப்பம் விடாமல் மட்டும் கவனமாக இருக்கவும்.!

மிதுன ராசி நேயர்களே.. மீந்து போனது, பழைய குழம்பு, மூணு நாள் சட்னி இப்படி சாப்பிட்ட உங்கள் வாழ்வில் இனி சுக்ர திசை..! வீட்டில் ஃப்ரிட்ஜ் ரிப்பேராகும்.. மெக்கானிக் சிக் ஆகி வர ஒரு வாரம் ஆகும்.. நெருப்பைத் தவிர இதுவரை சூடாக எதையும் காணாத உங்களுக்கு இனி வேளா வேளைக்கு சூடாக உணவுகள் கிடைக்கும்... முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டே சாப்பிட்டு ரசிக்கவும்... சிரிச்சா போச்சு..!

கடக ராசி நேயர்களே.. கடந்து வந்த உங்கள் வாழ்க்கைப்பயணம் இது வரை கட முடா தான் என்றாலும் இது இன்னும் சற்று நாள் நீடிக்கும்.. கடைச்சாப்பாடு கிடைக்கும் பாக்கியம் இல்லை.. கடுப்போடு மனைவி சமைக்கும் சமையலை அமைதியாக சாப்பிடவும்.. கடுப்பாகத்தான் இருக்கும் ஆனால் உங்கள் கடுப்பு தெரிந்தால் அவர் கடுகு தாளித்தது போல் தாளிப்பார்..தை பிறந்தால் வழி பிறக்கும்!

சிம்ம ராசி நேயர்களே.. சிரிப்போடு வெளியில் திரிந்தாலும்.. வீட்டுச் சமையல் நீங்க தான்..! பிடரி முடியை அள்ளி முடிந்து கொண்டு சின்ன வெங்காயம் நறுக்கும் உங்கள் துயர் தீர இன்னும் 3 மாதம் ஆகும்.. அதுவரை அது வெங்காயத்தை நறுக்கும் போது விட்ட கண்ணீர் எனக் கூறிசமாளிக்கலாம்.! பெண் சிங்கம் பலமுள்ளது என்பதை சிந்தித்து பார்த்து அடங்கிப் போகவும் இல்லாவிட்டால் அடக்கப் படுவீர்கள்.! வீணாக அசிங்கப்படாதீர்கள்.!

கன்னி ராசி நேயர்களே.. கலக்கம் மனதில் இருந்தாலும் கலங்காத உங்களுக்கே கலங்கும் படியான சோதனைகள் உப்புமா ரூபத்தில் வரலாம்.! எவ்வளவோ கஷ்டத்தை விழுங்கிய நீங்கள் இதையும் விழுங்கி விடுங்கள். எதிர்த்தால் உங்கள் ராசி உடம்பெங்கும் தெரிய வாய்ப்புண்டு..(கன்னிப்போகும் என்பதால்) மாசி மாதம் வரை இக்கஷ்டத்தை அனுபவிக்கவும்.. பிறகு அதுவே பழகிவிடும்..!

துலாம் ராசி நேயர்களே.. தராசு தட்டு போல தான் உங்கள் உணவும்! பேலன்ஸ்டு ஃபுட் மட்டும் சாப்பிடவும்.. துலாம் துலங்கும் என்பதற்கு ஏற்ப நீங்கள் வீட்டில் பாத்திரம் துலக்கி வைப்பது உங்களுக்கு நல்ல சாப்பாட்டிற்கு வழி செய்யும்.. ஒரு பக்கம் நீங்கள் படிக்கல் வைத்தால் மறுபக்கம் இருக்கும் கல்லை மனைவி எடுத்து விடுவதால் உங்கள் தட்டு தாழ்ந்தே இருக்கும்.. மனைவியிடமும் உங்கள் சாப்பாட்டு தட்டை தாழ்த்தியே உணவைக் கேட்பது நலம். துலாமுக்கு துயர் அதிகம்.!

விருச்சிக ராசி நேயர்களே.. வித்தையெல்லாம் காட்டினாலும் விரித்த துண்டில் சில்லறை மட்டுமே விழும் ராசி உங்களது ராசி..எப்போதாவது துண்டில் ரூபா நோட்டு விழுவது போல எப்போதாவது நல்ல சாப்பாடு கிடைக்கும்.. ஆனால் உங்கள் பேச்சால் பட்டினி கிடக்கவும் வாய்ப்புண்டு.. ஜாக்கிரதை மனைவியிடம் கொடுக்கை சுருட்டிக்கொண்டு இருப்பது பசியால் நீங்கள் சுருண்டு விழுவதை தடுக்கும். தினமும் காலையில் கோவிலுக்கு செல்லுங்கள் நிம்மதியாக ஓசி பொங்கலாவது கிட்டும்.!

தனுசு ராசி நேயர்களே.. நீங்கள் புத்திசாலி என்ன சொன்னால் மனைவிக்கு பிடிக்குமோ அதை சொல்லி நல்ல சோறு சாப்பிடுவீர்கள்.. ஆனாலும் ஆபத்து உங்களுக்கு ஜங்க்ஃபுட் வடிவில் வரும் வீட்டில் போன் செய்து ஆர்டர் பண்ணும் பீட்ஸா பர்கர் இவற்றிற்கு பணமும் அழுது உடல்நலம் கெட்டு நீங்களும் அழும் நிலை வரலாம்.. கடை உணவுக்கு தடை சொல்லுங்கள்.. மனைவி உங்களை சமைக்கச் சொன்னாலும் செய்துவிடுங்கள்..ஏனெனில் பத்தினி கோபம் பட்டினி போட்டுவிடும்.

மகர ராசி நேயர்களே.. வீட்டு சாப்பாடு போரடித்து ஓட்டலுக்கு போனால் அந்த ஓட்டல் வீடே பரவாயில்லை என்பது போல இருக்கும்.. விதி அங்கும் வந்து விளையாடி வேடிக்கை பார்க்கும்.. தயிர்சாதம் சப்பாத்தி போன்ற உணவுகளை தினமும் சாப்பிட பழகிக் கொள்வது நல்லது.. இந்த மாதம் நிறைய திருமணங்கள் நடப்பதால் விருந்து சாப்பாடு இருக்கும்..அதை நினைத்தாவது பெருமைப்படவும்!

கும்ப ராசி நேயர்களே.. குடித்து கும்மாளம் போட்டுவிட்டு வீட்டில் வந்தும் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவும்.. கும்பாவால் அடி வாங்கிய குடும்பத்தலைவன் என்ற அவப்பெயர் வரும். குக்கும்பருடன் சரக்கடித்த நீங்கள் குக்கரில் சாதம் வைத்து கொடுத்தால் மனைவியிடம் பூரண கும்ப மரியாதை கிடைக்கும். உங்கள் பலனுக்கு வித விதமாய்  பலகாரம் கிடைக்க குடியை நிறுத்துவதே பரிகாரம்.

மீன ராசி நேயர்களே.. மீன் போல துள்ளும் உங்களுக்கு வாரா வாரம் மீன் கிடைக்கா விட்டாலும் மீன் கிடைக்கும் ஐ மீன்.. மீனிங் என்ற அர்த்தம் (மீனிங்னாலே அர்த்தம் தானே.?) அதாவது நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் விளங்க மனைவி சொல்லுக்கு ஆமாம் என தலையாட்டினால் தினசரி விருந்து தான்.. உங்க ராசிக்கு பொருந்தும் இது எல்லா ராசிக்குமே பொருந்தும் தலையாட்டி வாழுங்க தலை வாழை இலை போட்டு சாப்பிடுங்க.. எல்லா ராசிக்கும் இதுவே பரிகாரம்





1 comment:

  1. your write up is quite hilarious- sorry for not posting in tamil-regards
    vishwanath

    ReplyDelete