#தெரு_விளையாடல்கள்
இன்று தெருக்களில் பிள்ளைகள் விளையாடுவது என்பது ரொம்ப அபூர்வம்! தொலைக்காட்சிகள் நம் வாழ்க்கையை ஆக்ரமிக்காத முற்பகுதி 80ஆம் ஆண்டுகளில் மாலை 4 மணிக்கே தெருவில் பிள்ளைகளின் ஆரவாரமும், மகிழ்ச்சி கூக்குரலும் இரைச்சலாக எதிரொலிக்கும்! விளையாடுவதற்கு அத்தனை விளையாட்டுகள்!
கில்லி, கோலி, பம்பரம், நுங்கு வண்டி போன்ற ஆட்டங்கள் களை கட்டும். டயர் உருட்டுவது போல பட்டறைகளில் உபயோகமின்றி தூக்கியெறியும் அரையடி உயர இரும்பு வளையத்தையும் அதை உருட்டிச் செல்ல முனையில் U வடிவத்தில் வளைந்த நீண்ட செல்ஃபி ஸ்டிக் போன்ற கம்பியும் வைத்து விளையாடுவோம்!
அதுவும் நூங்கு வண்டி போலத் தான்! ஆனா கொஞ்சம் காஸ்ட்லி 5 ரூபாய் தேவைப்படும்! ஆக்கர், அபிட் எடுத்து ஆடும் விதவிதமான பம்பர ஆட்டமும் அன்று பரபரப்பானது! பம்பர ஆட்டம் பற்றி நான் தனிப்பதிவே எழுதி இருக்கிறேன்! அடுத்ததாக கோலி! எலந்தைப் பழம் முதல் பெரிய நெல்லிக்காய் சைஸில் வண்ண கோலிகள்!
சோடா பாட்டிலுக்குள் இருக்கும் நீல கோலி போன்ற சிங்கிள் கலர் கோலிகள் முதல் கலைடாஸ் கோப்பின் டிசைன்கள் போல அல்லது ஓவியனின் பேலட் போர்டு போல கோலியின் கண்ணாடி மேனிக்குள் தெரியும் பலவண்ணங்களே அத்தனை அழகு! கோலி மீது இன்னொரு கோலியைக் கொண்டு அடிக்க வேண்டும்!
கட்டை விரலை தரையில் ஊன்றி நடு விரலின் முன்புறம் கோலியை வைத்து விரலை முடிந்த வரை பின்புறம் வளைத்து குறிபார்த்து எதிரே உள்ள கோலியை அடித்து தள்ளிக்கொண்டே போக வேண்டும்! நமது பவரை காட்ட இழுத்து சுண்டும் போது எதிரே இருக்கும் கோலி அடி பொறுக்காமல் நொறுங்கிவிடும்!
தன்வினை தன்னைச் சுடும் என்பது போல சில நேரம் நமது கோலியே உடைந்து போகும்! விரலால் சுண்ட சிறிய கோலிகள். பெரிய குழிக்குள் இருக்கும் கோலிகளை அடித்து வெளியே கொண்டு வர நெல்லிக்காய் சைஸ் கோலி வேண்டும்! அதை குறி பார்த்து மலிங்கா அல்லது பதிரனா போல குழியில் எறியவேண்டும்!
கில்லி கொஞ்சம் டேஞ்சர்! சொந்தமா கில்லியும் தாண்டலும் வைத்திருந்தால் அவன் கில்லியில் பெரிய ப்ளேயர். நாங்கள் அடித்த கில்லிகள் 50 குண்டு பல்புகள், 10 தெரு விளக்குகள், 20 ஜன்னல்கள், 10 சுவர் கடிகாரங்களை உடைத்திருந்தது! இந்தச் சாதனை விஜியின் பாட்டி மண்டை உடைந்த அன்று முடிந்தது!
விஜி என்கிற விஜயகுமாரின் பாட்டி மீதான மரியாதைனு உலகம் நினைத்தாலும் விஜியின் சகோதரி மீனா.. வேண்டாம் தெரு விளையாட்டுக்கு வருவோம்! அடுத்து பட்டம்! ஒரு ரூபாய்க்கு அப்போது அழகழகான வண்ணப் பட்டங்கள் கிடைக்கும்! 50 காசுக்கு இன்றைய A4 பேப்பர் சைசில் வாலுடன் கிடைக்கும்!
பெரிய பட்டம் 1 ரூபாய் பாதி நாளிதழ் சைசில் இருக்கும்! ஒரு ரூபாய் அன்று பெரிய பாக்கெட் மணி! வசதியுள்ள யாராவது பட்டம் வாங்கினால் அதைப் பார்த்து நியூஸ் பேப்பரில் பட்டம் செய்வோம்! சீன தயாரிப்புகள் எல்லாத்துக்கும் நாங்கதான் முன்னோடி!அதன் சூத்திரம் தெரியாது செய்யும் பட்டம் பறக்கும் முன்பே கிழிந்திடும்!
பறக்கும் விமானம் கண்டுபிடிக்க ரைட் சகோதரர்களே 117 முறை முயன்றபோது நாம் துவளலாமா 58வது முயற்சியில் நாங்க செய்த பட்டம் தரையிலிருந்து 6 அடி உயரத்தில் 16 விநாடிகள் பறந்து வீழ்ந்தது! அதன் பின்பு சரியான சூத்திரத்தில் பட்டம் செய்து பறக்கவிட்ட போது ரைட் பிரதர்ஸ் அளவுக்கு கொண்டாடினோம்!
பட்டம் கூட ஈஸி! அதுக்கு நூல் வாங்க பட்ஜெட் இருக்காது! எங்கடா இங்க இருந்த பச்சை நூல்கண்டை காணோம்னு டைலர் மிஷின் வைத்திருக்கும் வீட்டிலிருந்து ஒரு அக்கா கத்தும் ஒலி தெருவில் கேட்கும்! அடுத்தடுத்த ஆண்டுகளில் நாங்களே பெரிய பட்டம் செய்யும் டெக்னாலஜியை கற்று போரடித்து கைவிட்டோம்!
பொருட்கள் இல்லாத விளையாட்டுன்னா ஓடி பிடித்து ஆடுவது, கண்ணா மூச்சி, திருடன் போலீஸ், பச்சக்குதிர, சிகரெட் அட்டைகளை கல்லால் அடித்து நகர்த்துவதுன்னு ஏராளமான ஆட்டங்கள்! கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ.. எல்லாம் பெண் பிள்ளைகளின் ஆட்டங்கள்!
ஃப்யூஸ் போன பல்பில் நீர் நிரப்பி அதை சூரிய ஒளியில் காட்டி அதன் எதிரே வெள்ளைத்துணி கட்டி சினிமா பிக்சர்களை போட்டு அன்றைக்கே ஃபிலிம் காட்டியிருக்கிறோம்! லேத்தில் பம்பர ஆணி அடித்தது, வளையம் தள்ள கம்பி வாங்கி வளைப்பது, பட்டம் செய்வது என எங்கள் டெக்னிக்கல் ஸ்கில்லும் நன்கு வளர்ந்தது!
ஹாக்கி, கிரிக்கெட், ஃபுட்பால், ஷட்டில், டென்னிஸ், செஸ், என ஏராளமான ஆட்டங்கள் இன்றைக்கு உள்ளன! சம்மர் கோச், ஸ்பெஷல் கோச் தாண்டி பிரத்யேக அகாடமிகள் வந்துவிட்டன! ஆனால் அன்று தெருவில் ஆடிய விளையாட்டுகளுக்கு இணையாக இன்று எந்த ஒரு விளையாட்டும் இல்லையென்பதே உண்மை!
🧚♂️ இதில் இல்லாத விளையாட்டுகளை நீங்களும் சொல்லலாம்🏌️♀️