Friday, 17 January 2025

👀 கண்

#நல்லா_தெரியுது 




காலை 9 மணிக்குள் போயிடுங்க இல்லாட்டி கூட்டம் அலை மோதும்னு நண்பர் சொன்னார்! ஆமா இதென்ன சூப்பர் ஹிட் படக் காட்சியா? கூட்டம் அலைமோதன்னு அசால்டா நினைச்சுகிட்டு 9:01 மணிக்கு உள்ளே நுழைந்தால் குறைந்தது 400 பேராவது இருக்கும்! மூச்சடைத்து போனது! காலை 9 மணிக்கு இவ்வளவு கூட்டம்னா இவங்க எப்போ எந்திரிச்சாங்கா எப்ப சாப்பிட்டாங்க?


எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவியில் டோக்கன் நம்பர் 1084 என்று காட்டியது! எனது டோக்கன் எண் 2029 அவ்வ்வ்.. இன்று முழுவதும் இங்கே தான்னு முடிவாகிடுச்சு! வெயிட்டிங் ஹாலில் உட்கார நாற்காலி தேடியே 1 கி.மீ நடக்க வேண்டியதிருந்தது! ஒரு வழியாக சேர் கிடைத்து உட்கார்ந்தேன்! கூட்டத்தில் குழந்தைகள் அதிகம் இருந்தனர்! அவங்கள வீட்டில விட்டுட்டு வரக்கூடாதா?


பாவம்! அவங்களை ஏன் இங்கே கூட்டிட்டி வந்துருக்கானுங்க? புவர் கைஸ் என நினைத்துக் கொண்டேன்! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அழகிய பெண்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது! அட 2 பத்தி தாண்டிட்டேன் எங்கே வந்திருக்கேன்னு சொல்லலை பாருங்க! நான் வந்திருந்த இடம் சங்கரா கண் மருத்துவமனை! இது காஞ்சி சங்கர மடத்தால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை!


நல்ல சேவை, சிறந்த சிகிச்சை, குறைந்த கட்டணம் என்பதால் என் நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார்! கண் பரிசோதனைக்கு வந்து அமர்ந்திருந்தேன்! இப்போது நான் அமர்ந்திருக்கும் ஹால் ரிசப்ஷன்! நான் போய் அமர்ந்த 30 நிமிடம் கழித்து 2029 என்று என் டோக்கன் எண் அழைக்கப்பட்டது! அடடே வெறும்30 நிமிடத்தில் கூப்பிட்டுட்டாங்களேன்னு மகிழ்ச்சியோடு போனேன்!


டாக்டரிடம் போனேன்னு நினைக்காதிங்க! ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் தான் அழைத்தார்! எனது பூர்த்தி செய்த-பட்ட விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு ₹200 கட்டச் சொன்னார்! அதை ஜிபேயினேன்.. கிர்ர்..டிடக்.. என பிரிண்டர் செல்லமாக உறுமி பிரிண்ட் அவுட்டை துப்பியது! அதன் மீது சப்பக் என ஒரு முத்திரை குத்தி என்னிடம் தந்தார் ரிசப்ஷனிஸ்ட் பெண்!


15 நாட்கள் வேலிடிட்டி தான் அந்த சப்பக்! அடுத்த 15 நாட்களில் நாம் திரும்ப வந்தால் பணம் கட்டத் தேவையில்லையாம்! 2ம் எண் அறைக்கு போங்க என்றார்! திருப்பதி இலவச தரிசன வரிசை போல ரிசப்ஷன் வெயிட்டிங் ஹாலில் இருந்து 2ம் எண் அறைக்கு எதிரில் இருந்த வெயிட்டிங் ஹாலுக்கு மாற்றப்பட்டேன்! அப்போ தான் தெரியும் வந்திருந்த குழந்தைகள் அனைத்தும் பேஷண்ட்னு!


நிறைய குழந்தைகளுக்கு சத்து குறைபாடு, சிலருக்கு விபத்து, பலருக்கு டிவி, மொபைல் பார்ப்பதால் வந்த கேடு இப்படி பல விதங்களில் பாதிக்கப்பட்டு வந்திருந்தனர்! 5 வயது குழந்தை எனும் பலாப்பழத்தை எண்ணி 52 வயது எலந்தைப் பழமாக என்னை எண்ணிக் கொண்டேன்! இங்கும் அரைமணி நேரம் காத்திருப்பு! அப்போது 2029 என்று ஒரு குயில் கூவியது!


ஆம் குயில் போன்ற நிறத்தழகி அழைத்தார்! உள்ளே சென்று அமர்ந்தால் என் முன் இருந்த டேபிளில் கண் பரிசோதனை மிஷின் இருந்தது! அதில் என் நாடியை வைத்து எதிரில் இருந்த லென்ஸில் ஒரு கண்ணால் பார்த்து பிறகு மறு கண்ணால் பார்த்து, அடுத்த டேபிளுக்குப் போய் அங்கிருந்த மிஷினிலும் இதே போல முகம் வைக்க உள்ளே இருந்து விஸ்க் என காற்று கண்ணில் அடித்தது! 


கண்ணில் ஏதோ மின்னலடிச்சிடுச்சு பாடல் ஏனோ நினைவுக்கு வந்தது! இப்படி காத்து கண்ணில் அடிக்கும் போது நீங்க கண்ணை மூடாதிங்க அங்கிள் என்ற அந்தப் பெண்ணின் குரல் என் கண்ணை கத்தியால் குத்தியது போல வலித்தது! மனதை கல்லாக்கிக் கொண்டு கண்களை மூடாமல் டெஸ்ட்டை முடித்தேன்! அடுத்து 3 ஆம் நம்பர் ரூமுக்கு போங்கன்னு அடுத்த கேட்டுக்கு அனுப்பினர்!


சேம் டைலர், சேம் வாடகை போல 3ஆம் நம்பர் ரூமுக்கு முன் இருந்த ஹாலில் காத்திருந்தேன் இங்கு அரை மணி நேரம் கூட இல்லை 29 நிமிடத்திலேயே அழைத்து எதிரே இருந்த டிவியில் எழுத்துகளை காட்டி படிக்க சொன்னார்கள்! கண்ணுக்கு முன் இருந்த கண்ணாடி போன்ற அமைப்பில் கேரம் போர்டு காயின் போல லென்ஸ்களை டடக் டடக் என மாற்றி மாற்றி போட்டனர்!


ஆங் இப்போ நல்லா தெரியுது! (அப்பாடா ஹேஷ் டேக் தலைப்பு வந்துருச்சு) என்றவுடன் வெரிகுட் சார் 10ஆம் நம்பர் அறைக்கு போங்கன்னு சொன்னதும் 10 அறை விடலாம் போலத் தோன்றியது நேரில் முடியாவிட்டாலும் மானசீகமாக அறை விட்டேன்! அந்த அறையை விட்டும் நகர்ந்தேன்! 10 எண் அறை முன் நல்ல கடலளவு இடம் இருந்தது! ஆனால் கடுகளவு கூட அங்கு அமர இடமில்லை! 


கால் மணி நேரம் கால் கடுக்க நின்ற பின்பு இடம் கிடைக்க மேலும் ஒரு அரைமணி நேரம் கடந்து ஒரு நர்ஸ் வந்து கண்ணை திறங்க என சொல்லிவிட்டு இரண்டு கண்ணிலும் இரண்டு சொட்டு மருந்து விட்டுட்டு அரைமணி நேரம் கண்ணை மூடியே இருங்க சார்னு கையில் ஒரு பஞ்சு துணுக்கையும் தந்துவிட்டு சென்றார்! சுற்றிலும் 400 பேர் இருக்கும் இடத்தில் இப்படி கண்மூடி படுத்திருப்பது..


ஏதோ பட்டப் பகலில் பப்ளிக் பார்க் பெஞ்சில் தூங்கியதைவிட கொடூரமாக இருந்தது! அந்த அரைமணி நேரத்தில் எனக்கு பக்கத்து சீட்டில் 6 பெண்கள்  அமர்ந்து மாறிவிட்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது! ஆனால் அவர்களது முகத்தை பார்க்க முடியவில்லை! அதை எண்ணும் போது கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது! அந்த பஞ்சினால் துடைத்துக் கொண்டேன்!


அரைமணி நேரம் கழித்து வந்து கண்ணை திறக்க சொன்ன நர்ஸ் நான் கண்ணை திறந்ததும், அய்யே என்ன சார் கண்ணில் போட்ட மருந்தை எல்லாம் துடைச்சு வச்சிருக்கிங்க கண் மீது துடைக்க கூடாது கண்ணில் இருந்து வழியும் நீரை தான் துடைக்கணும்! சரி இப்போ நான் என்ன செய்ய? இருங்க மறுபடி மருந்து ஊத்துறேன்! செடிக்கு நீர் ஊற்றுவது போல எனது கண்ணில் ஊற்றிச் சென்றார்! 


இப்படி நான் கண்மூடித்தனமாக இருந்ததே இல்லை! மீண்டும் அரைமணி நேரம் ஆகி கண்ணை திறந்தா… அடேய்ய்ய்ய்ய்ய் கண்ணில் தென்பட்டவை எல்லாம் சலஃபன் டேப் சுற்றியது போல மங்கலாகவும் தமிழ் சினிமாவில் வரும் கிராஃபிக்ஸ் ஆவிகள் போலவும் அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தன! பதறாதிங்க சார் அடுத்த 4 மணிநேரம் இப்படித்தான் மசமசன்னு தெரியும் என்றார்!


10 எண் அறையில் இன்னும் சில பரிசோதனைகள் செய்தனர்! கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தனர்! எதிரில் இருப்பவர்கள் எல்லாம் குத்துமதிப்பாக தெரிந்தனர்! சார் உங்களுக்கு இப்போ கிட்டப் பார்வை 2.25 பவர்! அது இருந்தா தான் படிக்க முடியும் ரீடிங் கிளாஸ் வாங்க ஆப்டிகல் போங்க! இப்போ வேணாம் நாளைக்கு போங்க என்றார்கள்! மறுநாள் போய் வாங்கிட்டேன்! 


யெஸ் அயாம் இன் ஸ்பெக்ஸ் கிளப் 👓 🤓 🕶️


மருத்துவக் கட்டணம் + அனைத்து பரிசோதனைகள் + கண் கண்ணாடி எல்லாம் சேர்த்து மொத்தக் கட்டணம் அதிகமில்லை லேடீஸ் & ஜெண்டில்மென்ஸ் ₹500 மட்டுமே! நான் சென்றது கோவை சங்கரா கண் மருத்துவமனை PRO ZONE மால் எதிரில்! 

No comments:

Post a Comment