#தேடிவந்த_பிரியாணி
நல்ல புரோட்டா சாப்பிடணுமுன்னா மதுரைக்கு போகணும்! நல்ல சொதி சாப்பிடணுமுன்னா திருநெல்வேலிக்கு போகணும்! நல்ல அரிசீம் பருப்பு சாதம் சாப்பிடணுமுன்னா கோவைக்கு போகணும்! இந்த வரிசையில் நல்ல பாஸ்மதி பிரியாணி சாப்பிடணுமுன்னா ஹைதராபாத்துக்கு தான் போகணும் என்பதை நான் யார் மீது வேண்டுமானாலும் அடி அடின்னு அடித்து சத்தியம் செய்வேன்!
மதுரைக்கு வரும் நண்பர்கள் யாராவது என்னிடம் அம்மா மெஸ் போலாம்னா எனக்கு அவர்கள் மீது பரிதாபம் பொங்கும்! அதே பரிதாபத்தை என் ஆந்திர மித்ருடுக்கள் என் மீது கொட்டினர்! ஏன்னா நானும் அரிச்சந்திரன் சிவப்பாத் தான் இருப்பான்னு நம்பினவன்! எங்கேயோ எப்போதோ படிச்சது, கேள்விப்பட்டது இதை வச்சு பாரடைஸில் பிரியாணி சாப்பிடணும்னு சொன்னதும்..
அவங்க ஏமிரா இதின்னு அதிர்ந்தார்கள்! தன் பழம் பெருமைகளை தொலைத்த பாரடைஸ் பிரியாணி, ஹைதராபாத்தின் அம்மா மெஸ் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டதாம்! பாவர்ச்சி, கிராண்ட் போன்ற கடைகளை எனக்கு பரிந்துரைத்தனர்! அந்த பாரடைஸ் பிரியாணிக் கடையில் காலடி எடுத்து வைக்கும் முன் வாசலிலேயே என்னை அலேக்காக பெயர்த்து எடுத்துக் கொண்டு போனார்கள்!
பாவர்ச்சி போய் சேரும் போது அடுத்த நாளே ஐதராபாத் அழிந்து விடும் என்பது போல அங்கு மக்கள் கூட்டம் பிரியாணி வெறி கொண்டு குவிந்திருந்தனர்! இன்று உங்களுக்கு பிரியாணி கிடைப்பது கஷ்டம் தான் என்ற செய்தியை சுத்த உருதும் சுந்தரத் தெலுங்கும் கலந்து கூறினார் கடையின் மேலாளர்! நண்பர்கள் சரி ‘மா கார்த்திக்கு கால் செய் ரா’ ன்னு சொல்ல, வந்தார் கார்த்திக்!
அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினர்! கார்த்திக் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்! தனது 21 வயது வரை சென்னையில் இருந்து பிறகு ஹைதராபாத் வாசியானவர்! அவர் தமிழும் தெலுங்கும் சரளமாக பேசுவதைக் காட்டிலும் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது எது தெரியுமா? உணவு ரசனையில் டிட்டோ தெலுங்கானாவின் வெங்கடேஷ் ஆறுமுகமாக இருந்ததே!
நான் வந்திருக்கும் வேலை என்ன என்ன நிகழ்ச்சி எல்லாம் கேட்டார்! சகலமும் சொன்னேன்.. உங்க நிகழ்ச்சியின் சமையல் காரர் யார் தெரியுமான்னு கேட்டார்! அதையும் விசாரித்து சொன்னேன்! ஓ அவங்களா என்றவர் 20 விநாடிகள் சின்ஸியராக சிந்தித்தார்! சரி இன்னிக்கு உங்களுக்கு பிரியாணி வேண்டாம் என்றார்! நான் திடுக்கிட்டேன் ஏங்க இதைச் சொல்லவா நீங்க..
இங்கே வந்திங்க என்றதும் குறும்பாகச் சிரித்தார்! பாஸ் கையில வெண்ணெய்யை வச்சிகிட்டு நெய்க்கு அலைஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்க, நீங்க நெய் பாட்டிலை கையில வச்சிகிட்டே நெய்யுக்கு அலையறிங்களே அதான் அப்படி சொன்னேன் என்றார்! விஷயம் இதுதான் எங்க நிகழ்ச்சியின் கேட்டரர் ஹைதராபாத்தின் சிறந்த பிரியாணி கேட்டரராம்! அதான் அங்கேயே நீங்க போய்..
ஐதராபாத் பிரியாணி சாப்பிடுங்க அங்க நல்லா இல்லைன்னா சொல்லுங்க நாளைக்கு நான் உங்களை வேற இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சத்தியம் செய்தார் போலக் கூறினார்! நிலோஃபர் பேக்கரியில் தேவாமிர்தம் போன்ற டீயும், அற்புதமான பிஸ்கெட்டும் வாங்கித்தந்து வழியனுப்பினார்! முதல் நாள் இரவு 2 இட்லியும் காலையில் சிறிய கப்பில் பப்பாளியும் மட்டும் சாப்பிட்டு..
மதிய பிரியாணி விருந்துக்குத் தயாரானேன்! மதியம் 1 மணி பந்தியில் அமர்ந்தேன்! சேமியா, பால், நெய் சர்க்கரை சேர்த்து செய்த பூசணி அல்வா! அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் தூவி ரகளையாகத் தந்தனர்! அதிகபட்சம் 40 கிராம் அளவு தான் ஆனால் நம் கண்களை மூடி ரசிக்க வைக்கும் சுவை! 15 நிமிடம் கழித்து ஹைதராபாத் பாஸ்மதி பிரியாணி பந்திக்கு வந்தது!
இவ்வளவு ஆவி பறக்கும் சூட்டுடன் பிரியாணியை வேறெங்கும் நான் கண்டதில்லை! இதன் கூடவே பனசகாயா பிரியாணின்னு ஒரு வகை லெமன் சோற்றில் மட்டன் பீஸ் போட்ட மாதிரி வந்தது! அட்டகாசமான தால்ஸா, மிர்ச்சிகா சாலன், தயிர் வெங்காயம் எல்லாமே தூள்! ஆந்திரா சமையல் என்றாலே விதவிதமான பச்சடி & துவையல் வகைகளுக்கு பெஸ்ட்! தக்காளியில் துவங்கி பச்சை..
மிளகாய், கத்திரிக்காய், வெங்காயம், கோங்குரா, பீர்க்கங்காய், என வகை வகையான பச்சடிகள்! முந்திரி போட்டு வறுத்த வெண்டை வறுவல் இன்னொரு அற்புதம்! மிளகாய் பஜ்ஜியும் அதற்கு தயிர் பூந்தியும் தந்தனர்! சோறு, பருப்பு, நெய், ரசம் என வரிசையாக கூட்ஸ் போல வந்ததில் இரசத்தை மட்டும் வாங்கி சாப்பிட்டால் அது பிரியாணிக்கு நீயா? நானான்னு சவால் விட்டது!
ஹைதராபாதில் நான் நல்ல பிரியாணியை தேடிச்சென்ற போது கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து என்னையே கும்பிட்டது போல அந்த பிரியாணியே என்னைத் தேடி பல வகை ருசி மிகுந்த பதார்த்தங்களுடன் வந்தது! மாயா பஜார் எஸ்.வி.ரங்காராவ் போல நான் 2024ஆம் ஆண்டின் கடோத்கஜனாக மாறி தெலுங்கானா மாநில சிறப்பு உணவுகளோடு நல்ல விருந்தை ரசித்து ருசித்தேன்!
🥘 🥘 இதுவே எனக்குப் போதும் 🥘 🥘
No comments:
Post a Comment