Thursday, 16 January 2025

கூக்ளி

#கூக்ளி_எனும்_கோலம்

கூக்ளி என்பதை தமிழில் சொல்ல முயன்றால் எதிர் திசையில் திரும்பும் சுழல் பந்து என்பதை என்னளவில் சொல்வேன்! எளிமையா சொன்னா லெக் ஸ்பின்னர் போடும் ஆஃப் ஸ்பின் தான் கூக்ளி இதையே ஆஃப் ஸ்பின்னர் போட்டால் அது தூஸ்ரா ஆகிவிடும்! முன்பெல்லாம் இந்தியாவில் கூக்ளி வீசும் லெக் ஸ்பின்னர்கள் அரிது!

இந்திய சுழல் மன்னர்கள் பெரும்பாலும் ஆஃப் ஸ்பின்னர்கள்! லெக் ஸ்பின்னில் அனில் கும்ப்ளே ஒருவர் தான் டாப்! ஆனால் அவரும் கூக்ளி வகை பந்தை விட ஃப்ளிப்பர் வகை பந்து வீசுவதில் மன்னர்! சிவராமகிருஷ்ணன், ஹிர்வானி போன்ற ஸ்மால் லெக் ஸ்பின் ஹீரோக்களும் கூட கூக்ளி அதிகம் வீசியதில்லை!

நம் இந்திய அணியில் மூத்த வீரர் பி.எஸ். சந்திரசேகர் ஒரு மாயாவி! இவரையும் பிஷன் சிங் பேடியையும் எங்களுக்கு தாருங்கள் நாங்கள் உலகில் வீழ்த்தவே முடியாத அணியாக இருப்போம் என்பார் க்ளைவ் லாயிட்! இத்தனைக்கும் அன்று வெஸ்ட் இண்டீஸ் 95 சதவீத வெற்றிகளைப் பெறும் அணியாக இருந்தது!

நம் இந்தியாவில் இடதுகை ஸ்பின்னர்கள் அதிகம் இருந்ததால் அவர்களே லெக் ஸ்பின்னும் எளிதாக வீசினார்கள். ஆனால் நம் பங்காளி பாகிஸ்தான் அணியில் அப்துல் காதர், முஸ்தாக் அஹமத், பாகிஸ்தான் அணியின் ஒரே இந்து வீரரான டேனிஷ் கனேரியா போன்ற பிரத்யேக லெக் ஸ்பின்னர்கள் இருந்தனர்!

மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆஃப் ஸ்பின்னர்களின் பூமி! சக்லைன் முஸ்தாக் அதில் குறிப்பிடத் தக்கவர்! வார்னேவின் கூக்ளி போல சக்லைனின் தூஸ்ரா பந்து வீச்சு மிகப் பிரபலமானது! இவரது பந்துவீச்சு ஆக்‌ஷன் போலவே பின்னாளில் சயீத் ஆஜ்மல், ஷோயப் மாலிக் போன்றவர்கள் பந்து வீசினார்கள்.

மணிக்கட்டை வளைத்து ஆஃப் ஸ்பின் வீசும் இலங்கையின் முத்தையா முரளிதரனும் இந்திய அணியில் வித்யாசமான தோள் குலுக்கலுடன் பந்து வீசும் ஹர்பஜன் சிங்கும் தூஸ்ரா வீசுவதில் வல்லுநர்கள். சக்லைன் வீசும் தூஸ்ரா பந்தில் அதிக சுழற்சியும் திருப்பமும் இருக்கும். முரளி & ஹர்பஜனின் தூஸ்ராவில் திருப்பமும் நல்ல வேகமும் இருக்கும். இவர்களுக்குப் பிறகு நம் அணியில் அஸ்வின் இன்னும் பல சுழல் முறைகளில் வீசினார்!

இந்திய அணியின் பகுதி நேர லெக் ஸ்பின்னராக சச்சினும் இருந்தார்! குல்தீப் யாதவ், சாஹல் வருகைக்கு பிறகே கூக்லி வீச்சு இன்னும் மெருகேறியது. அமித் மிஸ்ரா & ப்யூஷ் சாவ்லா கூட ஷேன் வார்னே அளவிற்கு சில மேட்சுகளில் கூக்ளி வீசி அசத்தியுள்ளனர். ஆனால் உலகளவில் கூக்ளியில் அஃப்ரீதி கிங் என்று அழைக்கப்பட்டாலும் கிங் ஆஃப் பின் ஷேன் வார்னே தான்!

அவரது பந்து காற்றில் தேர் போல அசைந்து வந்து பிட்சில் பட்டதும் விருட்டென கணிக்கும் திசைக்கு எதிராக திரும்பும். வார்னே ஒரு ஓவரின் 6 பந்துகளையும் 6விதமாக வீசுவார்! அதை புள்ளிகளாக்கி கோடு போட்டால் ஒரு எட்டுப் புள்ளி கோலம் போலவேத் தெரியும்! வார்னே அளவுக்கு கூக்ளியில் கோலம் யாரும் போட்டதில்லை!

இங்கிலாந்தின் மைக் கேட்டிங்கிற்கு வார்னே வீசியது தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்து என விஸ்டன் குறிப்பிடுகிறது! ஷேன் வார்னேவிற்கு பின் ஆஸ்திரேலியாவில் ஸ்டூவர்ட் மெக்கில், ஆடம் ஜாம்பா போன்றவர்களும் சிறப்பாக கூக்லி வீசினார்கள்.

சந்திரசேகரில் துவங்கிய இந்திய லெக் ஸ்பின்னர்களின் காலம் தற்போது வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ராகுல் சஹார் போன்ற தரமான லெக் ஸ்பின்னர்களின் வளமான காலம் ஆகியிருக்கிறது

தூஸ்ரா என்றால் உருது மொழியில் மற்றொன்று என்று அர்த்தம்! தூஸ்ரா பாகிஸ்தானின் கண்டுபிடிப்பாகும். பிறகு கேரம் பாலை அஜந்தா மெண்டிஸ் கண்டறிந்தார். தற்போது ஸ்லைடர், கோல்ஃப் ஷாட், ஸ்பீட் ஆர்ம், டாப் ஸ்பின் போன்ற டெக்னிக்குகள் பிரபலம்.

நமது அஸ்வின், ஜடேஜா, நியூசியின் அஜாஸ், இங்கிலாந்தின் அடில் ரஷித், ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரேன் பாகிஸ்தானின் இமாத் போன்றவர்கள் இந்த பல்வேறு வகையான ஸ்பின்களையும் வீசும் ஆற்றல் கொண்டவர்கள்.

லெக் ஸ்பின்னுக்கும் கூக்ளிக்கும் வித்யாசம் தெரிந்தால் அவர் நல்ல கிரிக்கெட்டர் என்பது ஒரு பழைய மொழி! இப்போது கிரிக்கெட் ஆடும் ப்ளேயர்களுக்கு ஏன் பல கேப்டன்களுக்கே நிறைய ரூல்ஸ் தெரியாது! டிரிங்ஸ் இண்டர்வெல்லில் துண்டு சீட்டில் எழுதி அனுப்பி வீரர்கள் அதை படிப்பதை பல மேட்சுகளில் டிவியில் பார்க்கிறோம்!

No comments:

Post a Comment