“ஜாமூன் எத்தனை ஜாமூனடி”
குலாப் ஜாமூனை குளோப் ஜான், குலப்புஜான், என ஒழுங்காக அழைக்கத் தெரியாத இந்தத் தமிழர் சமூகத்தில் குலாப் ஜாமூன் வகைகளின் அருமை பெருமைகளை சொல்ல ஒரு மீட்பர் வேண்டும் அல்லவா! அதைத்தான் நான் முயல்கிறேன். ஜாமூனில் எனக்குத் தெரிந்த நான் ருசித்த ஜாமூன் வகைகளைப் பற்றிய ருசியான பட்டியல் இனி..
ஜாமூன்களில் பல வகை உண்டு.! டிரை ஜாமூன், காலா ஜாமூன், பெங்கால் ஜாமூன், ராஷ்போரா என பல வகைப்படும் இந்த ஜாமூனின் சரித்திரத்தை சுருக்கமாக தெரிந்து கொள்வோமா!
குலாப் ஜாமூன் முதன்முதலில் இடைக் கால இந்தியாவில் மத்திய ஆசிய துருக்கிய படையெடுப்பாளர்கள் காலத்தில் கொண்டு வந்த பஜ்ஜி போன்ற ஒரு உணவில் இருந்து உருவானதாக கூறுகின்றார்கள்.
இன்னொரு கூற்றும் உண்டு முகலாயப் பேரரசர் தாஜ. மஹால் புகழ் ஷாஜகானின் தனிப்பட்ட தலைமை சமையல்காரரால் ஒரு நாள் மிக மிக தற்செயலாக தயாரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.”குலாப்" என்ற வார்த்தை பாரசீக வார்த்தைகளான கோல் (மலர்) மற்றும் ஆப் (தண்ணீர்) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது, இது ரோஸ் வாட்டர் வாசனை கொண்ட சிரப்பைக் குறிக்கிறது.
"ஜாமூன்" அ "ஜாமன்" என்பது ஜம்போலான் பழத்தின் ஹிந்தி/உருது வார்த்தையாகும், இது ஒரே மாதிரியான அளவு மற்றும் வடிவம் கொண்ட இந்தியப் பழமாகும், இது கருப்பு பிளம் என அழைக்கப்படுகிறது.
அரபு தேசத்து இனிப்பான லுக்மத் அல்-காதி குலாப் ஜாமூனைப் போன்றது, இதில் உபயோகிக்கும் மாவு வேறு என்றாலும், சமையல் வரலாற்று ஆசிரியர் மைக்கேல் க்ரோண்டலின் கூற்றுப்படி, இவை இரண்டுமே பாரசீக உணவில் இருந்து பெறப்பட்டவை.
ரோஸ் வாட்டர் சிரப் இந்த இரண்டு வகைகளுக்கும் இடையே பொதுவான இணைப்பாக உள்ளது. எப்படியோ பாரசீக பஜ்ஜி ஜாமூன் ஆகி இன்று இந்தியாவின் அற்புதமான டெஸர்ட் உணவுகளில் ஒன்றாகி முன்னணியில் நிற்கிறது.
குலாப் ஜாமூன் என்றாலே மேலே பன்னீர் (ஓ.பி.எஸ் அல்ல) தெளித்து சாப்பிடணும் என்பதே இன்று பலருக்குத் தெரியாது! குலாப் ஜாமுனை சாப்பிடும் முறை இருக்கு!
முதலில் ஜாமூன் மீது பன்னீர் தெளித்து சூடான ஜீரா ஊற்றி ருசிக்க வேண்டும். ஜீரா மிக சூடாக இருந்தால் ஸ்பூனில் அதை அள்ளி அபிஷேகம் போல ஜாமூன் மேல் விடுவது சாலச் சிறந்தது.
பிறகு மெதுவாக ஸ்பூனால் சிலைஸ் இடுங்கள் அத்தோடு கொஞ்சம் ஜீராவும் அள்ளி எடுங்கள் அப்படியே சூடு தணிய ஊதி ஊதி ஊதி இதழ்களால் பற்றி உறிஞ்சுங்கள்!
நாவிற்குள் ஜீராவும் பற்களுக்கு இடையில் ஜாமூன் துண்டமும் அரைபட வேண்டும். அதை மெல்ல விழுங்குங்கள் ஒரு விள்ளலுக்கு 10 விநாடிகளாவது ரசித்து சாப்பிடுங்கள்.
ஜாமூனை சிதைப்பது, ஜீராவில் குழைப்பது எல்லாம் பெரும் பாவச்செயல்களாகும் அதை இனி செய்யாதீர்கள்.
டிரை ஜாமூன் என்பது புல்லட் ஷேப்பில் உருட்டப்பட்ட ஜாமூன்.இது ஒட்டகம் போல!
அது உள்ளே நீர் சேமித்து வைத்திருப்பது போல இதன் உள்ளே இருக்கும் ஜீரா வெளியே தெரியாது. மேலே முந்திரி பாதாம் சீவல்களோடு இதை ருசிப்பது அழகு.
காலா ஜாமூன் இது ஜாமூனின் பெரியப்பா டென்னிஸ் பந்தை விட 2 சுற்று சிறியதாக இருக்கும்! பாலும் தயிரும் சேர்த்து செய்யும் இனிப்பு இது!
ஜாமூனை விண்டால் உள்ளே கோவா உள்ளேன் ஐயா என்று தன் இருப்பை தெரிவிக்கும். இதன் ருசி தனி என்றாலும் குலாப் ஜாமூன் அளவிற்கு வராது! அடுத்து ராஷ்போரா..
இது என்ன என்று திகைக்க வேண்டாம்! உங்களை உப்புமா என்ற பெயரில் தலை தெறிக்க ஓட விடும் ரவையில் செய்யப்படும் ஜாமூன்! கிட்டத்தட்ட ஜாமூனின் ஃபேக் ஐடி இந்த ராஷ்போரா!
ருசி அப்படியே இருக்கும் பெங்கால் ஜாமூன் ஜீராவுடனும் டிரை எனவும் பல வகை உண்டு. அதன் வடிவங்கள் மாறலாம்! ஆனால் ருசி அதே ஜாமூன் ருசி தான்! ஜாமூன் கிண்ணத்தில் இஷ்டத்துக்கு நிறைய ஜீரா ஊற்றக் கூடாது!
இரண்டு குலாப் ஜாமூன்கள் உள்ள ஒரு கிண்ணம் என்றால் பாதி குலாப் ஜாமூன் மூழ்கி இருக்கும் அளவிற்கு ஜீரா இருப்பது நன்று. ஜாமூனை சாப்பிடும் முன் ஸ்பூனின் பின் புறத்தை தட்டையாக ஜாமூன் மேல் வைத்து மென்மையாக மிக மிக மிக மென்மையாக அழுத்த வேண்டும் கவனம்!
உடைத்து விடக்கூடாது. கொழுக் மொழுக் குழந்தையைக் கண்டால் அதன் புஷ்டியான கன்னத்தை வலிக்காமல் கிள்ளுவோமே அதைப்போல.இப்போது ஜாமூன் உடையாமல் அமுங்கி எழுந்தால் கடவுள் உங்களுக்கு நல்ல ஜாமூனை சாப்பிடும் பாக்கியத்தை தந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளவும்.
பன்னீர் தெளித்து சாப்பிடவும். ஐஸ்க்ரீமோடு ஜாமூன் எனில் பெஸ்ட் வெனிலாவும் பட்டர் ஸ்காட்சும் தான். அப்போது ஜீரா படு சூடாக இருக்க வேண்டும் என்பது ஆதார விதி!
ஐஸ்க்ரீமின் குளுமையும், ஜாமூனின் மென்மையும், ஜீராவின் இனிமையும் அந்த வெப்பமும் ஒன்றாக நாவில் சங்கமிக்கும் அந்தத் தருணத்தை தான் பூலோகத்தில் நம் முன்னோர்கள் அமிர்தயோகம் என்றழைத்தனர்! ஆம் அமிர்தமே!
No comments:
Post a Comment