எத்தனை பேருக்கு சிம்னி விளக்குகளை ஞாபகம் இருக்கு? 90ஸ் கிட்ஸே இதை அதிகம் பார்த்திருக்க முடியாதுனு கருதுகிறேன்! 80களில் பல வீடுகளில் மின்சார இணைப்பு இருக்காது! அவர்கள் வீடுகளில் எல்லாம் இந்த சிம்னி விளக்கே ஒளி விளக்கு! வீட்டில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் கூட மின் தடை வந்தால்..
டக்குன்னு ஏற்றுவது இந்த விளக்கைத் தான்! ஆகவே அன்றைய எல்லா நடுத்தர குடும்பங்களின் வீட்டிலும் இருந்த இன்றியமையாத பொருள் சிம்னி விளக்கு! சிம்னி விளக்குக்கு மேல் புறம் கவிழ்த்து வைக்கும் கண்ணாடிச் சிமிழ், விளக்குத்திரி, விளக்கின் அடிப்புறம் இவை எல்லாம் விற்பதற்கு தனிக்கடைகளே அன்று இருந்தன!
சில சமயங்களில் தெருவில் வண்டியில் வைத்துக் கொண்டுவந்து விற்பனையும் செய்வார்கள்! லாந்தர், பெட்ரோமாக்ஸ், சிம்னி இந்த மூன்று விளக்குகள் தான் அன்று பிரபலமானவை! பெட்ரோமாக்ஸ் ஐ போன் போல! மண்ணெண்ணெய் நிறைய ஊற்றணும்! தினமும் துடைக்கணும்! அது எரிவதற்கு நம்ம கவுண்டமணி & செந்தில்..
காமெடியில் செந்தில் உடைத்த மேண்டிலை அடிக்கடி வாங்க வேண்டும்! மேண்டில் ஒரு வலைத்துணி போல வட்டமாக இருக்கும் அதை விளக்கின் மத்தியில் இருக்கும் பீடத்தில் மாட்டி அதை பற்ற வைத்தால் அந்த வலைத்துணி எரிந்து அந்த பீடத்தை இறுகப் பற்றிக் கொள்ளும்! முட்டை போல வெண்மையாக மாறிவிடும்!
அது சிதையும் வரை அடுத்தடுத்தது அப்படியே பற்ற வைக்கலாம்! மேண்டிலின் பீடம் விளக்கில் கீழிருந்து மேலாக அல்லது தலை கீழாக எப்படி வேண்டுமானாலும் இருக்கும்! இதை பொருத்தி எரிய வைப்பதே ஒரு கலை! பெட்ரோமாக்ஸ் எரியும் போது ஒரு சிறிய ஜெனரேட்டர் ஓடுவது போல ஒரு சப்தம் எழும்பும்! வீடுகளில் இந்த,
பெட்ரோமாக்ஸ் இருப்பது அன்றைக்கு ஒரு தனி அந்தஸ்தாகும்! திருமண விசேஷங்களுக்கு பெரிய பெட் ரோமாக்ஸ் லைட்டுகள் உண்டு! எரியும் அந்த விளக்கினை தலையில் சுமந்து செல்லும் லைட் மேன்கள் இருந்தனர்! கல்யாண ஊர்வலங்களில் அவர்களும் விளக்கை சுமந்து கொண்டு மணமக்களோடு நடந்து வருவதை..
நீங்கள் பழைய சினிமாக்களில் பார்க்கலாம்! இப்போது அந்தத் தொழிலே இல்லை! அடுத்து லாந்தர்! சிம்னி விளக்கு டின் கோக் என்றால் லாந்தர் 2 லிட்டர் கோக்! சிம்னி விளக்கின் மெகா வெர்ஷன்! அரிக்கேன் விளக்கு என்றும் அழைப்பார்கள்! கடைகள், வயல்கள் & தோட்டங்கள், மாட்டு வண்டிகள் போன்ற இடங்களில்..
அதிகம் பயன்படுத்தப்படும்! லாந்தர் விளக்கு அன்றைய இரவுக் காவலாளிகள் வைத்திருக்கும் ஒரு முக்கியமான பொருளாகும்! இதற்கும் மண்ணெண்ணெய் தான் எரிபொருள்! இந்த விளக்கின் திரி பட்டையாக இருக்கும்! திரியை ஏற்றி இறக்கி ஒளியை கூட்டிக் கொள்ளலாம்! திரியை ஏற்றி இறக்க கடிகாரத்திற்கு..
சாவி கொடுப்பது போல ஒரு தண்டினை சுற்ற வேண்டும்! லாந்தர் விளக்கின் திரியைச் சுற்றி பெரிய கண்ணாடிச் சிமிழ் இருக்கும்! மொத்த விளக்கும் அலுமினியம், பித்தளை, செம்பு, வெண்கலம், தகரம் இப்படி ஏதாவது ஒரு உலோகத்தில் நன்கு மூடப்பட்டு இருக்கும்! இன்றைய செல்போன் cases போல லாந்தரின்..
கண்ணாடியைச் சுற்றி இந்த உலோக அமைப்பு இருக்கும்! புகை வெளியேற விளக்கின் தலைப் பகுதியைச் சுற்றி துளைகள் இருக்கும்! லாந்தர் உபயோகிக்கும் வீடுகளின் வெளிப்புற சுவரில் லாந்தர் விளக்கை மாட்ட அல்லது வைக்க பிரத்யேக இடம் இருக்கும்! வயல் வெளிகளில் இதற்காக ஒரு கம்பு ஊன்றி அதில்..
இந்த விளக்கை தொங்கவிட்டு இருப்பார்கள்! இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்க நேரிட்டால் மாட்டு வண்டிகளின் ரியர் லைட்டாக இருப்பது இந்த லாந்தர் தான்! வண்டிகளின் அடிப் பகுதியில் லாந்தர் விளக்குகள் மாட்டப்பட்டு முன்னால் மாட்டு வண்டி செல்வதை பின்னால் வரும் மோட்டார் வாகனங்களுக்கு..
காட்டும்! லாந்தரும் தினமும் துடைக்க வேண்டிய விளக்கு தான்! அடுத்து வீட்டு சிம்னி விளக்கு! அன்றைய இல்லங்களில் மாலை நேர டூட்டிக்கு வந்துவிடும் விளக்கு! வீட்டில் மண்ணெண்ணெய் டின்னில் இருந்து சிறிய பாட்டிலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி வைப்பார்கள்! அது சிம்னி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவே!
புனல் எடுத்து சிம்னியின் அடிப்பகுதியில் வைத்து அதன் கழுத்தளவு ஊற்றணும்! திரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிந்து உதிர்ந்த திரிகள் கரித்துகள்களாக படிந்து இருக்கும்! அதை துடைப்பது, உருட்டுத் திரி மாட்டுவது, புகை படிந்து இருக்கும் கண்ணாடிச் சிமிழை துடைப்பது எல்லாம் வீட்டில் யாராவது..
ஒருவர் செய்து கொண்டே இருப்போம்! சின்னப் பிள்ளைகள் கண்ணாடிச் சிமிழை உடைத்துவிடுவார்கள்! ஆகவே அதை மட்டும் பெரியவர்களிடம் தான் கையில் தருவார்கள்! வீட்டில் சிம்னி விளக்கிற்கு ஒரு மாடம் இருக்கும் அதற்குள் தான் அதை வைப்போம்! கைக்கு எட்டும் உயரத்தில் வைக்கமாட்டார்கள்!
பெரியவர்களே எக்கித்தான் வைப்பார்கள்! அன்றைக்கு பல வீடுகளில் தீ விபத்து ஏற்பட சிம்னி விளக்குகள் காரணமாக இருந்திருப்பதால் இந்த பாதுகாப்பு! இரவு தூங்கும் போது நம் பக்கத்தில் வைக்க கூடாது! சிம்னி விளக்கை வைக்கும் மாடம் திரியின் புகையால் கரிபடர்ந்து இருக்கும்! சில வீடுகளில்..
அங்கே கருப்பு வண்ணம் பூசி நீயென்ன கருப்பாக்குறது நாங்களே ஆக்கிக்கிறோம்னு வாலண்டியராக வண்டி ஏறி இருப்பார்கள்! இந்த திரிகளை கெரசினில் நன்கு ஊறவைத்து பிறகு மாட்டினால் நின்று எரியும்! இந்த மங்கிய வெளிச்சத்திலும் மங்காத மகிழ்ச்சி இருந்தது அந்த காலத்தில்! விளக்கின் திரியை இறக்கி அதன்..
வெளிச்சத்தை குறைப்பது போல வீட்டில் பொருளாதாரக் குறை இருந்தாலும், திரியை அதிகப்படுத்தி பிரகாசிப்பதை போல இந்த வெளிச்சத்திலும் நன்கு படித்து பெரிய பதவிகள் பெற்ற அநேகம் பேர் நம்நாட்டில் இருக்கின்றனர்! அப்படிப் படித்து முன்னேறிய பல குடும்பங்களின் ஒளிவிளக்குகள் இந்த சிம்னி விளக்குகளே!
No comments:
Post a Comment