டிஸ்னி வேர்ல்டின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் வால்ட் டிஸ்னி உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்களை அப்படியே அச்சு அசலாக நேரில் உலாவ விட்டு உங்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவது தான். இங்கே நூற்றுக்கணக்கான நடிகர் நடிகைகள் பணிபுரிகிறார்கள்.. வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முக அமைப்பு, உயரம், உடல்வாகு, இதெல்லாம் சரி பார்த்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒப்பனை செய்து...
முக்கியமாக ஆடை அணிகலன்கள் தத்ரூபமாக இருக்கும்படி வடிவமைத்து பொது மக்களிடையே உலாவ விடுகிறார்கள்.. இவர்களுக்கு ஆடைகள், அலங்காரம், ஒப்பனை செய்ய ஒரு குட்டி ஹாலிவுட்டே டிஸ்னிக்குள் இயங்குகிறது. அப்படி உலாவ விட்ட கதாபாத்திரங்களான அலாவுதீன் லைலா தான் நாங்கள் பார்த்து வியந்தது.. அங்கு நீண்ட வரிசையில் குழந்தைகள் நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த க்யூவில் நின்றெல்லாம் எங்களால் போட்டோ எடுத்துக் கொள்ள நேரமில்லை என்பது தெரிந்ததால்.. தூரத்தில் நின்று லைலா அலாவுதீனை போட்டோவில் சிறை பிடித்துக்கொண்டு திரும்பினோம். இன்னும் 40 நிமிடங்களை கடக்க வேண்டுமே.. எதிரே ஒரு மரப்பாலம் போன்ற காட்டுவழிப்பாதை தெரிந்தது.. கையில் உள்ள மேப்பில் விவரம் தேடினோம் அது ஒரு மரவீட்டின் உச்சிக்கு போய் விடும் 15 நிமிடங்கள் ஆகும் என்றது.
பாலத்தில் நடக்க ஆரம்பித்தால் 5 வது நிமிடம் ஒரு குட்டி ஆறு தென்பட்டது சுற்றிலும் மரங்கள் அப்படியே காட்டுக்குள் வந்தது போல அனுபவம்.. மர வீட்டில் ஆங்காங்கே கலைப்பொருட்கள்.. பாலத்தை கடந்ததும் ஒரு
பெரிய மரத்தில் பாதை ஏற்படுத்தப்படிருந்தது மரமேற ஆரம்பித்து உச்சிக்கு சென்றோம் மரத்தின் மேலே தான் அந்த வீடு.. அங்கிருந்து டிஸ்னி வேர்ல்டின் அழகிய தோற்றத்தை கழுகுப் பார்வையில் காண முடிந்தது. வாவ்..லவ்லி..!
பாதையின் அந்தப்பக்கம் பொட்டல் வெளியில் கட்டப்பட்ட அரங்குகள் இந்தப் பக்கம் கானக எபெஃக்ட் என இருப்பிடத்திற்கு ஏற்றவாறு நிர்மாணித்த டிஸ்னி இஞ்சினியர்களுக்கு வாழ்த்துகள்.. கழுகு பார்வையில் பறக்கும் பாய் ராட்டினம் இன்னும் அழகாக தெரிந்தது.. அங்கிருந்து கிளம்பி கீழே வந்தோம் இப்போது மணி 11:40 இனி என்ன நேரே கரீபியன் அரங்கம் தான். பிக்னிக் பேகில் இருந்த பழச்சாறு டின்கள் எங்கள் தாகம் தீர்த்தன.
எதிரே டிகி பேர்ட்ஸ் என்னும் அரங்கம் தென்பட்டது.. டிஸ்னியின் புகழ்பெற்ற கார்டூன்களில் ஒன்று.. இந்தப் பாடும் பறவைகள் ஷோ எங்களுக்கு கரீபியன் ஷோவிற்கு அடுத்து தான் என மேப் சொல்லியது.. நடந்தோம் கரீபியன் அரங்கத்தை அடைந்தோம் ஷோ தொடங்க 15 நிமிடமே இருந்ததால் பரபரப்பாக இருந்தது கழைக்கூத்தாடி வித்தை போல தெரிந்த கூட்டத்தை விலக்கி பார்த்தால் கரீபியன் பைரட் ஜாக் ஸ்பேரோ நின்றிருந்தார்..!
ஆம் டிஸ்னியின் நடிகர்.. அப்படியே நிஜம் போலவே இருந்தார் அங்குள்ள குழந்தைகளை அழைத்து ஒரு லைவ்வான ஷோ..! இரண்டே நடிகர்கள் அவர்கள் பேசும் நகைச்சுவை வசனங்கள்.. கூட்டத்திலிருந்து அழைத்த குழந்தைகளை கலாய்த்தல் என அந்த ஷோ நடந்தது. சுற்றிலும் நின்ற மக்கள் சிரித்து ஆரவாரம் செய்ய எனக்கு ஒரு சந்தேகம்.. இவர்கள் பேசுவது எப்படி துல்லியமாக எல்லோருக்கும் கேட்கிறது.? ஆடியோ சிஸ்டம் எங்கே?
எங்கு மைக் இருக்கிறது? எங்கு ஸ்பீக்கர் இருக்கிறது? என்பதே தெரியவில்லை.! யாரிடமும் காலர் மைக் கூட இல்லை கூட்டத்தில் இருந்து அழைக்கப்பட்ட குழந்தைகள் பேச்சு கூட துல்லியமாக கேட்கும் படி ஒலி அமைப்பு சபாஷ்.! இது முடிய கரீபியன் ஷோ ஆரம்பமாக உள்ளே போனோம் குகை போன்ற ஒரு அமைப்பு கடல் சத்தம் 10 பேர் வீதம் ஒரு படகில் ஏறி கிளம்பினோம்.பைரட்டுகளின் பகுதி நெருங்க அதிர்ச்சியில் உறைந்தோம்..
(வரும்..)
No comments:
Post a Comment