“காமிக்ஸ் காதலன்”
கடந்த 2020 ஆம் ஆண்டில் மதுரை புத்தகக் கண்காட்சியில் நீலம் அரங்கில் துவங்கிய எனது புத்தக வேட்டை, கண்ணதாசன், உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, பனுவல் என விரிந்தது. கண்காட்சியில் இருந்து வெளியேறும் இடத்தில் இருந்தது முத்து காமிக்ஸ் அரங்கு! உடனே நெஞ்சுக்குள் பெய்தது மாமழை! என் வயதில் 40 ஆண்டுகள் கழன்று பூமியில் விழ நான் 10 வயது வெங்கடேஷாக அங்கே மாறிவிட்டேன்!
‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் சொன்னதைப் போல முத்து காமிக்ஸை கண்டதும் “கண்டேன் என் கதாநாயகர்களை” என அரங்கினுள் புகுந்தேன். வெங்கலக் கடைக்குள் யானை நுழைந்த உதாரணம் அன்றோடு வழக்கொழிந்து போய் காமிக்ஸ் கடைக்குள் புகுந்த வெங்கடேஷ் எனும் உதாரணம் உருவாகிய தருணம் அது! வாசலிலேயே இரும்புக் கை மாயாவியின் இரண்டு புத்தகங்கள்!
பரவசமாக ஒரு குழந்தை போல அதை அள்ளினேன்! இரும்புக்கை மாயாவி, வேதாளன், டெக்ஸ்வில்லர் என என் ஆதர்ச ஹீரோக்கள் ஆங்காங்கே மறைந்து இருந்தனர். இவர்களது நாவல்கள் ஒன்றிரண்டு மட்டுமே கிடைத்தன! மற்றவை எல்லாம் ஸ்டாக் இல்லை என்றனர்! 47 வருடங்களாக ரஜினி கமல் தான் சூப்பர் ஸ்டார்ஸ்னு நினைச்சிட்டு இருக்கோம் ஆனா இந்த காமிக்ஸ் நாயகர்களும் 50 ஆண்டுகளுக்கும் மேல் சூப்பர் ஸ்டார்கள் தான் என்பதை அப்போது உணர்ந்தேன்.
எனக்கு தெரிந்து என் அம்மாவிடம் முத்து காமிக்ஸ் வாங்கிப் படிக்க அவ்வளவு கெஞ்சுவேன். அப்போ அதன் விலை 30 பைசா அப்பாவிடம் அந்த பிரச்சனை இல்லை அவர் மினிமம் கியாரண்டியாக 1 ரூபாய் தருவார். அதில் 3 காமிக்ஸ் வாங்கிவிட்டு மிச்ச 10 பைசாவுக்கு கோலி அல்லது பம்பரம் வாங்கிக் கொள்ளலாம். அன்றைக்கு ஒரு ரூபாயில் சினிமாவுக்கே போகலாம் 60 பைசா டிக்கெட் மீதி காசு தீனிக்கு.
இன்று கையில் காசு இருந்தும் என் ஹீரோக்கள் கிடைக்கவில்லை கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அரங்கிலிருந்த பெண் ஊழியரிடம் சரிம்மா மாயாவி, வேதாளன் இல்ல, லாரன்ஸ் & டேவிட் இருக்கா, ரிப் கிர்பி இருக்கா, மாண்ட்ரெக் இருக்கா, டேஞ்சர் டயபாலிக் இருக்… அந்தப் பெண் ஒரு 2kகிட்ஸ்! என்னை ஒரு வேற்றுகிரக வாசி போல பார்த்தார்! அந்தப் பார்வையும் அவரது முகத்தில் தெரிந்த பீதியும்..
யாரு சாமி இவன் எனும் பிரகாஷ்ராஜ் வாய்ஸ் அவர் மைண்ட் வாய்ஸாக எனக்கு கேட்டது! நானும் நிறுத்தாமல் ஆர்ச்சி இருக்கா, மாடஸ்டி ப்ளைசி இருக்கா, ஜானி நீரோ இருக்கா.. இப்போது அந்தப் பெண் “மேடம் சார் ஏதோ கேக்குறாங்கன்னு அரங்கின் கேஷ் கவுண்டரில் இருக்கும் சீனியர் பெண்மணியிடம் என்னை கோர்த்துவிட்டுவிட்டு ஒருவிதமான அச்சத்துடன் சிறிது தூரம் தள்ளியே நின்றுவிட்டார்!
அங்கிருந்த மாயாவி புத்தகங்களை கைப் பற்றிக் கொண்டு லாரன்ஸ் டேவிட், ரிப் கிர்பி, என ஓரிரு காமிக்ஸ்களை வாங்கினேன். ஏங்க மாயாவி புக்ஸ் எப்போ கிடைக்கும்? என்றேன் ஏக்கத்துடன். சார் ₹1800 கொடுத்தா முழு செட்டும் தபாலில் அனுப்புவோம் என தேன், சர்க்கரை, வெல்லம், இன்னும் என்னென்ன இனிப்புகள் உண்டோ அனைத்தையும் கரைத்து என் காதில் ஊற்றினார் அப்பெண்மணி!
அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனடியாக பணத்தைக் கட்டிவிட்டேன்! ஆனால் அந்த அரங்கினுள் 10 வயது சிறுவனாக மாறிய என் உணர்வுக்கு விலையே இல்லை அல்லவா!
டிஸ்கி : ₹1800க்கு வாங்கிய காமிக்ஸ் நல்ல பைண்டிங்கில் வந்தது அதில் மாயாவி கதைகள் 2 தான் இருந்தது!
No comments:
Post a Comment