Thursday, 16 January 2025

சாண்டா சதுர்த்தி

🎄🎅சாண்டா சதுர்த்தி கி.பி.2225🎅🎄

அமெரிக்காவின் டிசம்பர் மாதத்து கடுங்குளிர்! தெர்மல்வேர் ஏதும் அணியாமல் தைரியமாக உதித்திருந்தது சூரியன். ஊரே பனி படர்ந்து அண்டார்டிகாவின் ஃபேக்ஐடியாக மாறியிருந்தது. சாலையில் அதிகாலை வாக்கிங்/ஜாகிங் செல்பவர்களின் கூட்டமும் இல்லை! மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடிய உற்சாகக் களைப்பில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர்.

எல்லா வீடுகளின் வாசலிலும் அழகிய கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மாட்டப்பட்டு காற்றில் அசைந்து கொண்டிருந்தன. எங்கும் பனியால் செய்யப்பட்ட ஸ்நோமேன் பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், மணிகள் தென்பட்டன! அங்கிருந்த கிறிஸ்துமஸ் மரங்கள் அனைத்தும் வண்ண வண்ண விளக்குககளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. காற்றில் கிறிஸ்துமஸ் கீதங்கள் கலந்து ஒலித்தன.

ப்ளம் கேக்குகள், க்ரீம் கேக்குகள், விதவிதமான பர்கர்கள், பன்கள், சாண்ட்விச்சுகள், KFC சிக்கன் பக்கெட்டுகள், மெக்டி பிரெஞ்ச் ஃப்ரைஸ், பஃபலோ விங்ஸ், பாப்பாய் அலப்பினோ சிக்கன்கள், IHOP பான் கேக்குகள் போன்ற உணவுகளும் விஸ்கி, ரம், ஷாம்பெயின், ஒயின், பியர், கோக், பெப்ஸி, போன்ற பானங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஹூட்டர்ஸ் கடைகளில் கூட்டம் அலை மோதியது!

மக்கள் கூடும் வீதிகளில், சர்ச் வாசல்களில், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் தாத்தா என்கிற சாண்டா கிளாஸ் வேடமிட்டவர்கள் சிறுவர்களுக்கு சாக்லெட், விளையாட்டு பொம்மைகள் என பரிசு அளித்துக் கொண்டிருந்தனர்! இன்று இன்னும் நிறைய பரிசுகள் கொடுப்பார்கள்! ஏனெனில் இன்று தான் SCD விழா நடைபெறும் நாள்! இந்த கலாச்சாரம் சமீபத்தில் தோன்றிய கலாச்சாரமாகும்.

கடந்த வாரம் தான் கிறிஸ்துமஸ் முடிந்து இருந்தது 5 தினங்களுக்குப் பின்பு 2225 புத்தாண்டு பிறந்துவிடும்! ஆனால் அதற்கு முதல் நாள் முக்கியமான தினம்! SCD எனும் விழா விமரிசையாக கொண்டாடும் நாள்! தெருவில் பல வகையான சாண்டா கிளாஸ் உருவச் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன! பேஸ்பால் சாண்டா, WWE சாண்டா, Coke சாண்டா, NBA சாண்டா, ஹாலோவின் சாண்டா, லிபர்டி சாண்டா..

ரெட் இண்டியன் சாண்டா, ஹாலிவுட் சாண்டா, கெளபாய் சாண்டா, மேடி கிராஸ் சாண்டா, பெவர்லி சாண்டா, பிளாக் ஃப்ரைடே சாண்டா என விதவிதமான கோலத்தில் சாண்டா பொம்மைகள் அமெரிக்கா முழுவதும் பல நகரங்களில் வைக்கப்பட்டிருந்தன! இந்த SCD விழா நடக்கும் தினத்தில் அத்தனை சாண்டாக்களையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்தந்த ஊர் ஆறுகளில் கரைப்பார்கள்!

60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை ஆட்சி செய்த இந்திய வம்சாவளி அதிபர் ஒருவரின் யோசனையால் உருவானது தான் இந்த சாண்டா சதுர்த்தி! இன்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது! அமெரிக்காவில் நடைபெறுவதே உலகின் மிகப் பெரிய SCD விழாவாகும்! அது என்ன SCD விழா?! SANTA CLAUS DISSOLUTION என்பது தான்!

இந்தச் சூழலில் சாண்டா பொம்மைகளை ஆற்றில் கரைப்பதால் அமெரிக்காவின் நீர்நிலைகள் மாசுபடுகின்றன என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், ஆற்றில் கரையாத சாண்டா பொம்மைகள் அடித்து வரப்பட்டு குப்பையாக நயாகரா அருவியில் வந்து வீழ்கிறது.. கனடா ஒன்றும் அமெரிக்காவின் குப்பைத்தொட்டி அல்ல என கனடா அதிபர் கொந்தளிக்க, “டேய் எந்திரிடா என்றது என் தங்கை உமாவின் குரல்!

டக்குன்னு முழிச்சு பார்த்தா.. புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கான தொடர் பயணங்கள் செய்த களைப்பில் மாலை நேரத்திலேயே நன்கு அசந்து தூங்கியிருக்கேன். என் எதிரில் மின்விசிறி காற்றால் படபடத்துக் கொண்டிருந்த புத்தகத்தில் விநாயகர் சதுர்த்தி முடிந்து நாம் நீர் நிலைகளில் கரைக்கும் பொம்மைகளால் ஏற்படும் மாசு பற்றி நான் படித்த கட்டுரை கண்ணில் பட்டது! ஓ அதான் இந்தக் கனவா?!

No comments:

Post a Comment