Thursday, 16 January 2025

தியேட்டர் தீனிகள்

#திரையரங்க_உணவுகள்

திரைப்படமும் தீனியும் நம் தமிழர்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்ட உண(ர்)வாகும். இன்று தியேட்டர்களில் கோக், பெப்ஸி பானங்களுடன், பிரட் சாண்ட்விச் & பர்கர் வகைகள், விதவிதமான கேக்குகள் & டோனட், சிக்கன் நக்கெட், பாப்கார்ன் பக்கெட் என்று பல ஜங்க்ஃபுட் உணவுகளே கிடைக்கின்றன! அப்படியே உங்கள் கண் முன் கொசுவர்த்திச் சுருளை சுழலவிட்டு அல்லது..

காலயந்திரத்தில் ஏற்றி அந்த ப்ளாஷ் பேக் காலத்திற்கு அழைத்துச் செல்லவே இப்பதிவு! திரையரங்குகளில் முதன் முதலில் விற்கப்பட்ட தீனிகள், நிலக்கடலை, பட்டாணி, உப்பு பட்டாணி, பொரி & கடலை போன்றவையே. தியேட்டர் வாசலில் நிச்சயம் ஒரு தாத்தாவோ பாட்டியோ அவித்த மரவள்ளி/ சக்கரவள்ளி/ பனங் கிழங்குகள் , கள்ளக்காய், மாங்காய், நெல்லிக்காய், கொடுக்கா புளி போன்ற பண்டங்களை விற்பார்கள்!

கடலை மிட்டாய், இஞ்சி மொரப்பா, கல்கோணா, பப்பரமுட்டூ, தேன் மிட்டாய், அச்சு வெல்லம், சில்லுக் கருப்பட்டி போன்ற மிட்டாய் வகைகள் கிடைக்கும் எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் தியேட்டரில் நான் பார்த்த தின்பண்டங்கள் தட்டுவடை, முறுக்கு, தேங்காய் பர்பி தான்! இவை மூன்றும் மும்மூர்த்திகள்! தியேட்டர்களில் வெளிவரும் படங்கள் மாறலாம்! ஆனால் இந்த மும்மூர்த்திகள் இல்லாத தியேட்டர்களே அன்று கிடையாது!

தட்டையும் முறுக்கும் ஒரு CDக்குஒரு சுற்று குறைவான சைஸில் கிடைக்கும்! அந்தத் தோற்றமே ஆச்சரியப்படுத்தும்! ஏனெனில் அன்று பெட்டிக்கடைகளில் பாட்டில்களில் போட்டு மூடி தான் தின்பண்டங்கள் விற்பார்கள்! ஆகவே கைவிட்டு எடுக்க வசதியாய் சிறிய வளையல் சைசில் தான் இவை கிடைக்கும்! அப்படிப் பார்த்த முறுக்கும் தட்டையும் தியேட்டர்களில் விஸ்வரூபமாக காட்சிதர வியந்து போய் பார்த்து வாங்குவோம்!

தேங்காய் பர்பி ஒரு க்யூப்பின் மினியேச்சர் சைசில் நிச்சயம் 50 கிராம் இருக்கும்! தட்டையின் மேனியில் முழு நிலக் கடலைகள் கடலை பருப்புகள் பருவப் பெண்ணின் முகப் பருபோல தென்படும்! இவை பற்களில் அரைபடும்போது அவ்வளவு ருசியாக இருக்கும்! 4 சுற்றுகள் இருக்கும் கை முறுக்கை ஆட்காட்டி விரலில் மகாவிஷ்ணு சக்கரம் போல சொருகிக் கொண்டு அதன் ஒவ்வொரு சுற்றாகக் கடித்து தின்னும் சுகமிருக்கே! ஆஹா!

தேங்காய் பர்பி இன்னுமொரு அற்புதம் சர்க்கரையும் தேங்காயும் சேர்ந்த கலவை தான்! தேங்காய் துருவல்களும் சில நேரம் சின்ன துணுக்காக தேங்காயும் நாவில் தட்டுப்படும்! அன்று தியேட்டர்களில் கோலி சோடா & கலர் சோடா, ஜிஞ்சர் ப்ரீஸ், பன்னீர் சோடாக்கள் தான் கிடைக்கும்! இவையனைத்தும் பீச்சில் சுண்டல் விற்பது போல கையில் ஒரு பெரிய அலுமினிய டிரேவில் அடுக்கி தியேட்டருக்குள் கொண்டுவந்து விற்பார்கள்!

சோடா வகைகளுக்கு ஒரு க்ரேடு இருக்கும்! அதையும் தூக்கிக் கொண்டு சோடா ஓப்பனரால் பாட்டில்கள் மீது பியோனோ கட்டைகளில் இழுப்பது போல கிளிங்..ளிங்.. ளிங் என இழுப்பார்கள் அன்று இந்த தின்பண்டங்களுக்கு தனியாக கேண்டீன் கிடையாது! 70களின் மத்தியில் தம்ஸ் அப், டபுள்7, கோல்டு ஸ்பாட், டொரினோ, போன்றவை அறிமுகமாகி தியேட்டர்களையும் ஆக்ரமித்தன! சில தியேட்டர்களில் வடை பஜ்ஜி வகைகள் போடுவதுண்டு!

பெரு நகரும் அல்லாத கிராமமும் அல்லாத நடுவாந்திர ஊர்களில் இடை வேளையில் தியேட்டரிலேயே இட்லி, தோசை சுட்டு விற்பார்கள்! படம் முடிந்து ஓட்டலுக்கு தேடிப் போக வேண்டியது இல்லை. அந்த சட்னி சாம்பார் எல்லாம் அருமையாக இருக்கும். பின்பு கடலைமிட்டாய் வகைகளுக்கு பதில் பாப்பின்ஸ், எக்லேர்ஸ் போன்ற சாக்லெட்டுகள், போலோ போல நடுவில் துளையுள்ள சூடம் மிட்டாய்கள் போன்றவையும் அறிமுகமாயின!

எல்லா தியேட்டர்களில் கேண்டீன் துவங்கப்பட்டது! அந்த குளிர் பானங்களை வைக்கும் டாப் ஓபன் பிரிட்ஜ் பெட்டியையே நாங்கள் சினிமா போல பார்த்தோம்! அதன் கதவை திறந்து வியர்த்த உடலுடன் இருக்கும் கோல்டு ஸ்பாட்டை ரசித்து குடித்துவிட்டு அந்த பாட்டில்களை கன்னத்தில் வைத்துக் கொள்வது எங்கள் சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்று! அன்று சென்னை தவிர எங்கும் ஏசி திரையரங்குகள் இல்லை!

ஏசி தியேட்டர்கள் ஆரம்பித்த பின்னரே தியேட்டர்களில் பேக்கரி ஸ்வீட் கடை போல கண்ணாடி ஸ்டால்கள் வைத்த கேண்டீன்கள் துவங்கின! 80களின் துவக்கத்தில் இங்கு ஜம்மென்று வந்து அமர்ந்து கொண்டது முட்டை போண்டாவும் கோன் ஐஸ்க்ரீமும்! படத்துக்காக இல்லாமல் இதை சாப்பிடவாவது தியேட்டருக்கு போகணும் என்று ஏங்கியோர் பல! அதிலும் அலுமினிய நிறத்து கோன் ஐஸ் மிசினில் ஒரு கைப்பிடி போல இருக்கும்!

அதை மேலே தூக்கியதும் அருவி போல ஐஸ்க்ரீம் வெளியேற அதை அழகாக கோனில் பிடித்து தருவார்கள்! அன்று வெனிலா ஒன்று தான் ஃப்ளேவர்! அதுவே அன்று பலருக்கு ஃபேவர்! சில தியேட்டர்களின் கோன்கள் பிஸ்கெட் போல நல்ல தரமாக ருசியாக இருக்கும்! காசு சேமித்துக் கொண்டுவந்து 2 கோன் ஐஸ்களை சிலர் வாங்குவார்கள் அதைப் பார்த்தால் நமக்கு அந்த ஐஸ்க்ரீம் மிஷினிலிருந்து அந்த ஐஸ்க்ரீம் வெளியே வருவது போலவே பொறாமை பொங்கும்!

கோன் ஐஸ்க்ரீம் குளுமையான அனுபவம் எனில் முட்டை போண்டா ரசனையான அனுபவம்! தங்கம் போன்ற மஞ்சளில் தகதகக்கும்! உள்ளே அவித்த முழு முட்டை! இதை வாங்கியதும் கடித்தால் வாய் வெந்துவிடும் அந்தளவு சூடாக கிடைக்கும்! போண்டாவையும் முட்டையையும் தனியாக பிரித்து அதை ஊதி ஊதி ரசனையாக தின்பதை இன்றும் நினைத்தாலே ருசிக்கிறது! முழு முட்டை பிறகு பாதி முட்டை என்று தேய்ந்தது!

முட்டை போண்டாவுக்காகவே சில தியேட்டர்கள் புகழ் பெற்றிருந்தன! அதன் பின்னர் 80களின் மத்தியில் எல்லா தியேட்டர்களிலும் பாப்கார்ன் வந்தது! 90களில் பெப்ஸி & கோக் அறிமுகமாகும் வரை இதுவே தலையாய தியேட்டர் தீனிகளாக இருந்தன! விருதுநகர், சிவகாசி பக்கமெல்லாம் ரசனையோடு முட்டை போண்டாவை நான்காகக் கீறி மிளகுத்தூள், சீரகத்தூள் துவித் தருவார்கள்! சில தியேட்டர்களில் பப்சும் கிடைத்தன!

க்ரீம் பன், தேங்காய் பன், சுருள் பன் போன்ற பன் வகைகளும் ஓ.பி.எஸ் போல சில காலம் ஆட்சி நடத்தின! மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் படம் பார்க்கப் போனால் ஒரு முட்டை போண்டாவை ருசித்துவிட்டு, அந்த மசாலா பாப்கார்ன் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டு ஜில்லுனு 1 பன்னீர் சோடாவுடன் தியேட்டருக்குள் நுழைவது ஜேம்ஸ்பாண்ட் தனது அழகிய காதலிகளை முத்தமிடுவற்கு இணையான சுகமாகும். இதை அனுபவிக்காத மதுரைவாசிகளே இருக்க முடியாது!

காலமாற்றத்தில் இன்று எல்லாம் மாறிவிட்டது! அன்றொரு நாள் ஐநாக்சில் தம்பி குடும்பத்தோடு சென்றிருந்த போது! க்ரில்டு சிக்கன், சாண்ட்விச், பர்கர், கோக் என வாங்கி இறுதியாக 5லிட்டர் பெயிண்ட் டப்பா சைசில் பாப்கார்ன் வாங்கினார்கள்! உனக்குடா என்றான் தம்பி.. கை முறுக்கு கிடைக்குமாப்பா என்றேன் ஏக்கத்துடன்..

கிடைக்குமா…

{இதில் நான் சொல்லாமல் விட்ட தின்பண்டங்கள் அல்லது உங்க ஊரில் நீங்கள் அனுபவித்ததை 👇🏿கமெண்ட்டில் சொல்லலாம்)

No comments:

Post a Comment